
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள தமிழக - கர்நாடக எல்லைப் பகுதி அடிப்பாளாறு. இப்பகுதியில் உள்ள காவிரி நீர்த்தேக்கத்தில், நான்கு சடலங்கள் மிதப்பதாக, அப்பகுதியில் கால்நடை மேய்ப்பவர்கள், கொளத்தூர் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொளத்தூர் காவல்துறையினர், சடலமாக மிதந்த இடத்தின் கரையில் ஆய்வு செய்தபோது அங்கு இருந்த இருசக்கர வாகனத்தில் ஒரு தொலைபேசி எண் இருந்துள்ளது. இதையடுத்து, அந்தத் தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு விசாரணை நடத்தியதில், அங்குச் சடலமாக மிதந்தவர்கள், சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி நெசவாளர் காலனி பகுதியைச் சேர்ந்த யுவராஜ், அவரது மனைவி மற்றும் அவரது இரு மகள்கள் என்பது தெரியவந்தது.
மேலும், யுவராஜின் மூத்த மகளுக்கு கடந்த மூன்று வருடக்காலமாக நீரிழிவு நோய் பாதிப்பு இருந்து வந்தது. இதற்கு சிகிச்சை எடுத்து வந்த நிலையில், அவரது இளைய மகளுக்கு பரிசோதனை செய்ததில் அவருக்கும் நீரிழிவு நோய் இருந்தது தெரியவந்தது. இதனால் மனமுடைந்த யுவராஜ், தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களையும் இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு மேட்டூர் அருகே உள்ள அடிப்பாளாறு காவேரி ஆற்றில் தனது இரண்டு மகள்களை வீசிக் கொலை செய்துவிட்டு, கணவன், மனைவி இருவரும் தண்ணீரில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் சொல்லப்படுகிறது.
நீரிழிவு நோயால் பாதித்த இரண்டு மகள்களின் நிலையைத் தாங்கிக்கொள்ள முடியாமல் குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.