சேலத்தில், ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 40 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக பொய்யான வாக்குறுதி அளித்து, 1500 முதலீட்டாளர்களிடம் 16 கோடி ரூபாய் சுருட்டிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மெய்யனூர் தாயங்காடு பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் (43). சேலம் மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமாரிடம் புகார் அளித்தார். அதில், ''சேலம் 5 சாலை பகுதியில் டிஎன்ஏ எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை கொண்டப்பநாயக்கன்பட்டி மாருதி நகரைச் சேர்ந்த தினகரன் அன்பரசு (30), குரங்குசாவடியைச் சேர்ந்த கந்தகுமார் (30), நாராயண நகரைச் சேர்ந்த கோவிந்தராஜ் (54) ஆகியோர் நடத்தி வந்தனர்.
அவர்களுடைய நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால், மாதம் 40 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக உறுதி அளித்தனர். இதை நம்பிய நான், எனது நண்பர்களிடமும் கூறினேன். நாங்கள் அனைவரும் சேர்ந்து, அவர்கள் நடத்தி வந்த நிறுவனத்தில் 2.27 கோடி ரூபாய் முதலீடு செய்தோம். ஆனால் அவர்கள் உறுதியளித்தபடி, முதலீட்டுத் தொகைக்கு வட்டித்தொகை தரவில்லை. இதுகுறித்து கேட்டபோது கொலைமிரட்டல் விடுத்தனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்று கூறியிருந்தார்.
இந்தப் புகார் குறித்து, விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு, சேலம் மத்திய குற்றப்பிரிவுக்கு ஆணையர் உத்தரவிட்டார். ஆய்வாளர் அமுதா வழக்குப்பதிவு செய்து, தினகரன் அன்பரசு, கந்தகுமார், கோவிந்தராஜ் ஆகிய மூவரையும் கைது செய்தார்.
இதுகுறித்து குற்றப்பிரிவு துணை ஆணையர் செந்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''கைது செய்யப்பட்ட மூன்று பேரும் மோசடி செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் நிறுவனத்தைத் தொடங்கி உள்ளனர். அவர்களின் போலி வாக்குறுதியை நம்பிய 1500 முதலீட்டாளர்களிடம் இருந்து 31.47 கோடி ரூபாய் வசூலித்து உள்ளனர். அதில், 15 கோடி ரூபாய் வரை முதலீட்டாளர்களுக்கு வட்டித்தொகை பிரித்துக் கொடுத்துள்ளனர். 16 கோடி ரூபாய் வரை மோசடி செய்திருக்கிறார்கள்.
பேராசை பெரு நஷ்டம் என்ற பழமொழிக்கு ஏற்ப, அதிக வட்டிக்கு ஆசைப்பட்டதால் மக்கள் ஏமாந்துள்ளனர். சேலத்தில் தொடர்ந்து இதுபோன்ற குற்றங்கள் நடந்து வருகிறது. மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்,'' என்றார்.