Skip to main content

தேர்தல் அறிவிப்புக்கு பிறகு லேப்டாப் விநியோகம்; பள்ளி தலைமை ஆசிரியருக்கு நோட்டீஸ்!

Published on 13/03/2019 | Edited on 13/03/2019

 


சேலத்தில், மக்களவை தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு, மாணவிகளுக்கு அரசின் இலவச லேப்டாப் வழங்கிய மாநகராட்சிப் பள்ளித் தலைமை ஆசிரியருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டு உள்ளது.

 

sc


மக்களவை தேர்தல் கால அட்டவணை கடந்த 10ம் தேதி மாலையில் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அப்போதுமுதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. 


தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக அரசு நிகழ்ச்சிகள் நடத்தவோ, நலத்திட்ட உதவிகள் வழங்கவோ தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு (மார்ச் 10, 2019) சேலம் பாவடி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்தல் விதிகளை மீறி அரசின் இலவச லேப்டாப் அவசர அவசரமாக  வழங்கப்பட்டன. லேப்டாப்புகளை உடனடியாக வந்து பெற்றுக்கொள்ளும்படி பள்ளி ஆசிரியர்கள், பிளஸ்2 மாணவிகளுக்கு செல்போன் மூலம் தகவல் அளித்து, பள்ளிக்கு வரவழைத்துள்ளனர்.

 

s


இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ரோகிணியிடம் புகார்கள் குவிந்தன. இதையடுத்து, நடந்த சம்பவங்கள் குறித்து உரிய விளக்கம் அளிக்கும்படியும், தேர்தல் விதிகள் மீறி செயல்பட்டிருந்தால் உள்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று கேட்டும் பாவடி மகளிர் பள்ளித் தலைமை ஆசிரியருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 


இதுகுறித்து ஆட்சியர் ரோகிணியிடம் கேட்டபோது, ''தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதால், அரசியல் கட்சி பிரமுகர்கள் மட்டுமின்றி, அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். 

இதற்கிடையே, கடந்த 10ம் தேதி மாலையில், இடைப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியிலும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் அந்தப்பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சார்ந்த செய்திகள்