சேலத்தில், மளிகை சிறப்பு அங்காடி மேலாளர் ஒருவர், 5 லட்சம் ரூபாயை திருடிவிட்டு, மர்ம நபர்கள் திருடி விட்டதாக காவல்துறையில் புகார் அளித்த நாடகமாடியதும், இறுதியில் கைதான சம்பவமும் நடந்துள்ளது.
சேலம் நெத்திமேடு இட்டேரி சாலையில் பிரபலமான மளிகை சிறப்பு அங்காடி செயல்பட்டு வருகிறது. இதே பகுதியில் இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான மளிகை பொருள்களை இருப்பு வைப்பதற்கான கிடங்கு உள்ளது. ஜன. 22- ஆம் தேதி வசூலான 5 லட்சம் ரூபாயை கிடங்கில் உள்ள பெட்டகத்தில் வைத்து இருந்தனர். மறுநாள் முழு ஊரடங்கு என்பதால் நிறுவனம் அடைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், ஊரடங்கு நாளன்று (ஜன. 23) கிடங்கை பார்வையிட வந்த அந்த நிறுவனத்தின் மேலாளர் தனசேகரன், அங்கிருந்த பெட்டகத்தில் வைக்கப்ப்டடு இருந்த 5 லட்சம் ரூபாய் திருட்டுப் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் மளிகைப் பொருள்களும், சில ரூபாய் தாள்களும் அங்கே சிதறிக் கிடந்தது.
இதுகுறித்து தனசேகர் அன்னதானப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். துணை ஆணையர் மோகன்ராஜ், உதவி ஆணையர் அசோகன், அன்னதானப்பட்டி காவல் ஆய்வாளர் சந்திரகலா மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். மோப்ப நாய் மூலம் சோதனை நடத்தியும் துப்பு கிடைக்கவில்லை.
விசாரணையில், பெட்டகத்தின் பூட்டு உடைக்கப்படாமல் திருடு போயிருப்பதும், கிடங்கின் சாவி அதன் மேலாளர் தனசேகர் (வயது 32), மண்டல மேலாளர் செல்லபாண்டியன் ஆகியோரிடம் மட்டுமே இருப்பதும் தெரிய வந்தது. இதனால் பணத்தைத் திருடிவிட்டுஅவர்களே நாடகமாடுகிறார்களோ என்று காவல்துறையினருக்கு சந்தேகம் வந்தது.
காவல்துறையினர் அவர்களைப் பிடித்து விசாரித்தனர். தனசேகர் மட்டும் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியதால் அவர் மீது மேலும் சந்தேகம் வலுத்தது. காவல்துறையினர் தங்களது பாணியில் விசாரித்தபோது, பணத்தை எடுத்ததாக ஒப்புக்கொண்டார்.
திருடிய பணத்தை, ஓமலூரில் உள்ள தனது நண்பரிடம் கொடுத்து வைத்துள்ளதாகவும் கூறினார். அதையடுத்து, ஓமலூரைச் சேர்ந்த அவருடைய நண்பரை அழைத்துவந்து, அவரிடம் இருந்த 5 லட்சம் ரூபாயை பறிமுதல் மீட்டனர்.
மேலாளர் தனசேகரின் பின்புலம் குறித்து விசாரித்தபோது, அவருடைய சொந்த ஊர் மதுரை மாவட்டம் மேலூர் என்பதும், சேலத்திற்கு வேலை தேடி வந்ததும், இங்கேயே ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு, குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டதும் தெரிய வந்தது.
இந்த மளிகை நிறுவனத்தில் வேலைக்குச் சேர்வதற்கு முன்பு, சேலம் 5 சாலையில் உள்ள கார்ப்பரேட் நிறுவனத்திற்குச் சொந்தமான வணிக வளாகத்தில் தனசேகர் வேலையில் இருந்துள்ளார்.
கிடங்கு பெட்டகத்தில் இருந்து பணத்தைத் திருட முடிவு செய்த தனசேகர், ஆதாரப்பூர்வமாக சிக்கி விடக்கூடாது என்பதற்காக முன்கூட்டியே கிடங்கில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை அணைத்து வைத்துள்ளார். எல்லோரும் சென்ற பிறகு, இரவு நேரத்தில் அவர் மட்டும் தனியாக வந்து பெட்டகத்தைத் திறந்து பணத்தைத் திருடிச் சென்றிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், அவரே மர்ம நபர்கள் பணத்தைத் திருடி விட்டதாக அப்பாவி போல காவல்துறையில் புகார் அளித்துவிட்டு, நாடகமாடியிருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து தனசேகரை கைது செய்த காவல்துறையினர், நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.