ஊரடங்கு உத்தரவால் அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்பட்டதால், சேலம் மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை பெருக்கெடுத்து ஓடுகிறது. காவல்துறையின் அதிரடி சோதனையில், ஊரடங்கு காலத்தில் மட்டும் 203 சாராய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளதோடு, 2000 லிட்டர் கள்ளச்சாராயத்தையும் அழித்துள்ளனர்.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. அத்தியாவசியத் தேவைகளின்றி மற்ற எதற்காகவும் மக்கள் பொதுவெளியில் நடமாடக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன.
மதுவுக்கு அடிமையானவர்கள் சில இடங்களில் டாஸ்மாக் கடைகளின் பூட்டை உடைத்து மதுபானங்களைத் திருடிச் செல்வது அரங்கேறி வருகிறது. மதுபானம் கிடைக்காத விரக்தியில் நீரில் வார்னீஷ் மற்றும் சானிடைஸர் திரவம் கலந்து குடித்த சம்பவத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க, சேலம் மாநகரில் பாக்கெட்டுகளில் அடைத்து கள்ளச்சாராயம் விற்கப்படுவது தெரிய வந்தது. விசாரணையில், இவை சேலம் மாவட்டத்தில் காரிப்பட்டி, ஆத்தூர் காவல் எல்லைகளுக்கு உட்பட்ட அறுநூற்றுமலை, பச்சைமலை, ஓமலூர், ஏற்காடு எல்லைக்கு உட்பட்ட சேர்வராயன் மலை, மேட்டூர் அருகே பாலமலை ஆகிய மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயத்தை காய்ச்சி, மாநகரப் பகுதிகளில் விற்பனை செய்வது தெரிய வந்தது.
இதையடுத்து எஸ்பி தீபா கனிகர் உத்தரவின்பேரில் உள்ளூர் மற்றும் மதுவிலக்குப்பிரிவு காவல்துறையினர், அனைத்து மலைப்பகுதிகளிலும் கடந்த பத்து நாள்களாக கள்ளச்சாராய வேட்டையில் ஈடுபட்டனர். இதுவரை சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனை செய்த குற்றங்களின்பேரில் 180 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 1700 லிட்டர் கள்ளச்சாராயம் அழிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், சனிக்கிழமை (ஏப். 11) நடந்த ரெய்டில் மேலும் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 185 லிட்டர் கள்ளச்சாராயத்தை கைப்பற்றினர். மேலும், 500 லிட்டர் ஊறலும் கைப்பற்றி அழிக்கப்பட்டது.
மலைப்பகுதிகளில் சாராயம் காய்ச்சும் பகுதிகளை ட்ரோன் கேமராக்கள் மூலம் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். ஊரடங்கு காலத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல் தொடர்பான வழக்குகளில் மட்டும் இதுவரை சேலம் மாவட்ட காவல்துறையினரால் 203 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதோடு, 2000 லிட்டருக்கு மேல் கள்ளச்சாராயம் அழிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.