சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா வார்டில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி, திடீரென்று தப்பியோடி தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் மணியம்மாள் (50). இவருடைய கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். இதையடுத்து அவர் தனியாக வசித்து வந்தார்.
அதே ஊரைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் மெக்கானிக் சங்கர் (42) என்பவருக்கும், மணியம்மாளுக்கும் தவறான தொடர்பு இருந்து வந்தது. மணியம்மாள், சங்கர் பெயரில் ஒருவரிடம் 20 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். அதில் 12 ஆயிரம் ரூபாயை சங்கரிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார். மீதப்பணம் 8 ஆயிரம் ரூபாயை தராமல் காலம் கடத்தி வந்துள்ளார்.
இது தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு மணியம்மாளை கழுத்தை நெரித்து சங்கர் கொலை செய்தார். ஏத்தாப்பூர் காவல்துறையியினர் அவரை கைது செய்தனர்.
சங்கரை சிறைச்சாலையில் ஆஜர்படுத்துவதற்கு முன்பாக, அவருக்கு கரோனா மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவருக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சனிக்கிழமை மதியம் திடீரென்று மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.
அவரை தேடிப்பிடிப்பதற்காக பெத்தநாயக்கன்பாளையத்திலும், மனைவியின் சொந்த ஊரான கள்ளக்குறிச்சியிலும் தனிப்படையினர் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். சனிக்கிழமை இரவு, அவர் குடிபோதையில் பெத்தநாயக்கன்பாளையத்தில் உள்ள வீட்டுக்கு வந்தார். காவல்துறையினர் அவரை பிடிக்க வருவதை அறிந்ததும், வீட்டுக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். காவல்துறையினர் அவரை மயிரிழையில் உயிருடன் மீட்டனர். மீண்டும் அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர்.
கரோனா கைதி ஒருவர் சிகிச்சையில் இருந்து தப்பியோடிய 12 மணி நேரத்திற்குள் காவல்துறையினர் பிடித்துவிட்டாலும், அவர் எங்கெங்கெல்லாம் சென்றார்? என்பது குறித்து விசாரித்தனர்.
மருத்துவமனையை விட்டு வெளியேறிய சங்கர், முதலில் ஒரு ஆட்டோவில் ஏறிச்சென்றதும், அதன்பிறகு ஒரு டாஸ்மாக் மதுபானக் கடைக்குச் சென்றதும் தெரிய வந்துள்ளது. மது குடித்த பிறகு, ஒரு பேருந்தில் ஏறி, வீட்டுக்குச் சென்றிருப்பதும் தெரிய வந்தது.
ஆனாலும் அவர் சென்ற ஆட்டோ, பேருந்து குறித்த விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. அவர் மூலம் வேறு பலருக்கும் நோய்த்தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற பீதியும் ஏற்பட்டுள்ளது.
'ஷேடோ வாட்சிங்' மிஸ்ஸிங்:
பொதுவாக, கைது செய்யப்படும் ஒருவர், 24 மணி நேரத்துக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதும், அதன்பிறகு சிறைச்சாலையில் நீதிமன்றக் காவலில் அடைப்பதும் நடைமுறை. ஆனால், சங்கரை கைது செய்த காவல்துறை, அவரை எங்கு வைத்து கைது செய்தோம்? எத்தனை மணிக்கு கைது செய்தோம் என்ற விவரங்களை முறையாகச் செய்து முடிப்பதற்குள்ளாகவே அவருக்கு கரோனா நோய்த்தொற்று இருக்கும் விவரம் தெரிய வந்துவிட்டது.
சிறைக்குச் செல்வதற்கு முன்பாக ஒரு கைதி நோயுற்றது தெரிய வந்தால், அவரை சிறையில் அடைக்க முடியாது. மருத்துவமனையில் வைத்துதான் சிகிச்சை அளிக்க முடியும். அதனால் சங்கருக்கும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரை கண்காணிக்க 'ஷேடோ வாட்சிங்' என்ற பெயரில் சம்பந்தப்பட்ட காவல்நிலையம் சார்பில் ஓரிருவரை கண்காணிப்புப்
பணிக்கு அமர்த்த வேண்டும்.
கரோனா வார்டில் சிகிச்சையில் இருந்த சங்கரை கண்காணிக்க எந்த ஒரு காவலரையும் பணியமர்த்தவில்லை எனத் தெரிகிறது. எனினும், கரோனா வார்டு கண்காணிப்புப் பணிக்கென மருத்துவமனை காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும், அவர்களுக்கும் போக்குக் காட்டிவிட்டு சங்கர் தப்பிச்சென்றது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.