சேலத்தில் எட்டுவழிச்சாலைக்கு எதிராக ஆட்சேபனை மனு அளித்தவர்களிடம் நடத்தப்படும் விசாரணையை நிறுத்தி வைக்கக்கோரி தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போலீசார் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சேலத்தில் இருந்து சென்னை வரை 277.3 கிலோமீட்டர் தொலைவுக்கு, பத்தாயிரம் கோடி ரூபாயில் எட்டுவழிச்சாலைத் திட்டம் கொண்டுவரப்பட உள்ளது. இதற்காக பெரும்பகுதி விவசாய நிலங்களை கையகப்படுத்தப்படுவதால், இத்திட்டத்திற்கு சேலம் விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சேலம் மட்டுமின்றி இத்திட்டம் அமைய உள்ள தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் எதிர்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில், இரண்டாம்கட்டமாக கூடுதல் நிலங்களை கையகப்படுத்துவது குறித்து தமிழக அரசு சர்வே எண்களை வெளியிட்டு இருந்தது. இதற்கும் எதிர்ப்பு தெரிவித்த சேலம் மாவட்ட விவசாயிகள், இத்திட்டத்திற்காக நிலம் கொடுக்க மறுத்து ஆட்சேபனை மனு அளித்தனர்.
அவ்வாறு மனு அளித்தவர்களிடம் தனிநபர் விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, சேலத்தை அடுத்த அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள எட்டுவழிச்சாலைக்கான நில எடுப்பு வருவாய் அலுவலர் குழந்தைவேல் தலைமையில் கடந்த 22ம் தேதி விசாரணை தொடங்கியது.
அப்போது 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் விசாரணையை புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டு வீடு திரும்பினர். மறுநாள் குள்ளம்பட்டி பகுதி விவசாயிகளிடம் விசாரணை நடத்த அழைப்பு அனுப்பப்பட்டது. அதற்கும் எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது தீர்ப்பு வரும்வரை விசாரணையை ஒத்திவைக்கும்படி கூறினர்.
விசாரணையை ஒத்திவைக்க முடியாது என்று அதிகாரிகள் திட்டவட்டமாக கூறினர். இதையடுத்து விவசாயிகள் விசாரணை நடக்கும் அலுவலகம் அருகே திடீரென்று தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை கை, கால்களைப்பிடித்து தரதரவென இழுத்து, கூட்டத்தை கலைக்க முற்பட்டனர். இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதில், விவசாயிகள் தரப்பில் எட்டுக்கும் மேற்பட்டோர் லேசான காயம் அடைந்தனர். போலீசார் தங்களை தாக்கியதாகவும் அவர்கள் கூறினர். விவசாயிகள் சிவகாமி, கவிதா, வடிவேல் ஆகியோர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தன் காவல்துறையில் அளித்த புகாரின்பேரில், விவசாயிகள் மோகனசுந்தரம், ரவி, கலா, நாராயணன், பன்னீர்செல்வம், வீரமணி, சிவகாமி, கவிதா, வடிவேல், மூர்த்தி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது, அதிகாரியை செல்ல விடாமல் தடுத்தது உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் விவசாயிகளிடையே மேலும் கொந்தளிப்பு அதிகரித்துள்ளது.
இதுகுறித்து எட்டுவழிச்சாலை எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் கூறுகையில், ''எட்டுவழிச்சாலைத் திட்டம் தேவையில்லாத ஒன்று. இந்தத் திட்டத்தால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். அவர்களிடம் இருக்கும் சொற்ப நிலமும் பறிபோகும் நிலை உள்ளது.
இதனால் திட்டத்தைக் கண்டித்து அறவழியில் போராடும் விவாசயிகள் போலீசார் தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தாக்குதலுக்குக் காரணமான வருவாய் அலுவலர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
இல்லாவிட்டால், எட்டுவழிச்சாலைத் திட்டத்தை நிறுத்தும்வரை விவசாயிகளை ஒருங்கிணைத்து தொடர் மறியல் போராட்டங்களை நடத்துவோம். விவசாயிகளை தாக்கியவர்கள் மீது நடவடிக்கக் கோரி கலெக்டரை நேரில் சந்தித்து முறையிடுவோம்,'' என்றார்.