கடந்த மாதம் நாங்குநேரி தேர்தல் ஆய்வுக் கூட்டத்திற்கு வந்தார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி. அவரிடம், ‘பணமில்லை என்ற காரணம் சொல்லித்தானே வெளி மாவட்ட வேட்பாளர்களை இறக்குமதி செய்கிறீர்கள். எட்டு வருடங்களாக எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்தகுமார் அதோ இருக்கிறார். அவர் தொகுதிக்கு என்ன செய்தார். பத்து வருடம் நாங்கள் வெளியூர் சென்று விட்டு பணம் சம்பாத்யம் பண்ணிவிட்டு வருகிறோம். அப்போது சீட் கொடுங்கள். அது வரையிலும் தொகுதி காங்கிரஸ் வேலையை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று எக்ஸ் எம்.பி. தனுஷ்கோடி ஆதித்தனின் உறவினரான சிவனேஷ் ராஜேஸ் உட்பட தொகுதியின் தொண்டர்கள் கொதித்தார்கள். எழுந்த வசந்தகுமாரோ, நான் எனது உறவினர்க்கோ, மாமன் மச்சானுக்கோ சீட் கேட்க மாட்டேன் என்று தலைமையிடம் சொல்லி விட்டேன் என்றிருக்கிறார் உருக்கமாக. தலைவர் அழகிரியும் உங்கள் உணர்வுகள் மதிக்கப்படும். ஏற்கிறேன் என்று சொல்லி விட்டுப் போனார்.
ஆனால் தொண்டர்களிடம் கொடுத்த வாக்குறுதியையும் மீறி வேட்பாளர் தேர்வில் ஆதிக்கம் செலுத்தினார் எம்.பி. வசந்த்குமார். தனது அண்ணன் குமரி அனந்தனுக்காக சீட் கேட்டார். அவரோ நான் பைசா செலவு பண்ணமாட்டேன் என்று சொல்லி விட, மறைந்த எம்.எல்.ஏ.வான ஸ்ரீவை. தொகுதியின் ஊர்வசி செல்வராஜின் மகனான ஊர்வசி அமிர்தராஜ் தனக்கு வேண்டப்பட்ட எக்ஸ் எம்.பி. தனுஷ்கோடி ஆதித்தன் மூலம் காய் நகர்த்தியவர். 25 ‘சி’.க்கு தயார். செலவை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்ல. தனுஷ்கோடி அவரது பெயருடன் டெல்லி போயிருக்கிறார். இடையே, வேண்டாம் ரிஸ்க் காலம் குறைவு செலவு அதிகம் என்று அமிர்தராஜின் நண்பர்கள் சொல்ல அவர் பின் வாங்கி விட்டார். இதை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட வசந்தகுமார், தலைவர் அழகிரி, தமிழக டெல்லி அப்சர்வர் முகுல் வாஸ்னிக் மற்றும் சஞ்சய்தத் உட்பட அனைவரையும் சரிக்கட்டியவர். தன், சம்பந்தியான ரூபி மனோகரனைச் சொல்ல. டெல்லியில் அமிர்தராஜ், ரூபி மனோகரன் இருவர் பெயர் கொண்ட பேனல் மட்டுமே தரப்பட்டது.
அங்கே 9 பேர் கொண்ட தேர்வுக் கமிட்டியில் வலுவான ப.சி.தம்பரம் இடம் பெறமுடியாதது வசந்தகுமாருக்கு நல் வாய்ப்பு. இரண்டு பெயர் தானா. இவர்களைத் தவிர, வேறுயாரும் கேட்கவில்லையா. அதுவும் வெளி மாவட்டக்காரர்கள். தொகுதி தொண்டர்கள் ஏற்பார்களா என கமிட்டியில் கடும் விவாதம் ஏற்பட்டிருக்கிறது.
21 பேர்களில் 16 பேர்கள் தொகுதி சார்ந்தவர்கள் உட்பட கேட்டார்கள் என்று சொன்ன போது விவாதத்திலிருந்த எம்.பி. கார்த்தி சிதம்பரம் அவர்களில் தகுதியானவர்களைக் கொடுங்கள் என்று கேட்டதையடுத்து 5 பேர்களைக் கொண்ட அடுத்த பட்டியலைக் கொடுத்திருக்கிறார்கள். கொடுத்து விட்டு, இவர்களால் 10 முதல் 25 லட்சம் வரை தான் செலவு பண்ண முடியும் என்று சொல்லி விட்டதாக விவாதத்தில் சொல்லப்பட்டது. இந்த விவாதம் முடிய இரவு வரை ஆனது. இழுபறிக்குப் பின், கடைசியில் முகுல் வாஸ்னிக், சஞ்சய்தத் ஆகியோர் தலைவர் அழகிரி, வசந்தகுமார் பக்கம் சாய்ந்தார்கள். எம்.எல்.ஏ. லைப் ஒன்றரை வருடம் மட்டுமே. இதற்காக யாரும் செலவைக் கொடுக்க மாட்டார்கள். ரூபி மனோகரன் தரப்பில் தொகுதி, அனைத்துச், செலவும் 25 ‘சி’ ஏற்பதாகவும் கட்சியை எதிர் பார்க்கவில்லை என்று உறுதல் தரப்பட்ட பிறகே, வசந்தகுமாரின் திட்டப்படி அவரது சம்பந்தி ரூபி மனோகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்கிறார்கள் டெல்லி ஸோர்சுகள்.