Skip to main content

அமைச்சர் பெயரால்  தொடரும் பழிவாங்கும் நடவடிக்கை!

Published on 03/02/2019 | Edited on 03/02/2019


 

j


 ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களை குறிவைத்து நடத்தப்படும் பழிவாங்கல் நடவடிக்கை புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகமாக உள்ளது. இதற்கு அமைச்சரிடம் நல்ல பெயரை வாங்க வேண்டும் என்றும் அமைச்சர் ஆதரவு தனக்கு உள்ளது என்பதை காட்டவும் கல்வி அதிகாரி இப்படி நடவடிக்கையில் இறங்கியுள்ளார் என்று குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் ஆசிரியர்கள்.
  


ஜனவரி 22 ந் தேதி ஜாக்டோ ஜியோ போராட்டம்  தமிழகம் முழுவதும் திட்டமிட்டபடியே தொடங்கியது. போராட்டம் தொடங்கி 5 நாட்கள் வரை அனைத்துப் பள்ளிகளும் மூடி இருந்தது. உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்கள் அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவை ஏற்று தற்காலிகமாக முழுநேர ஆசிரியர்களாக பணியில் இருந்தனர். அரசுப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது என்று அரசு சொன்னது பகுதிநேர ஆசிரியர்கள் பள்ளியில் முழுநேரமாக வேலை செய்ததால் தான்.  அதன் பிறகு பணியிடை நீக்கம், பணியிட மாறுதல் என்ற அச்சறுத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில் தமிழகம் முழுவதும் 1000 பேருக்கு மேல் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அதன் பிறகு படிப்படியாக ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினார்கள்.    இதில் மற்ற மாவட்டங்களை காட்டிலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டுமே ஆசிரியர்கள் மீது அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். 

 


அதாவது வேலை நிறுத்தம் செய்த நிலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை கைது செய்த போலிசார் சங்க நிர்வாகளையும் அதிகம் பேசியவர்களையும் தேர்வு செய்து வழக்கு பதிவு செய்து 92 ஆசிரியர்களை சிறைக்கு அனுப்பினார்கள் இவர்கள் அனைவரும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர். அதன் பிறகு வேலை நிறுத்தப் போராட்டத்தில்  இருந்த 7030 ஆசிரியர்களுக்கும் 17(பி) நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டு அந்த இடங்களுக்காக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க விண்ணப்பங்களை வாங்கினார்கள்.  சுமார் 7 ஆயிரம் விண்ணப்பங்கள் வரப்பெற்றது. 
  ஆனால் ஆசிரியர்கள் முழுமையாக பணிக்கு திரும்பும் முன்பே ஆசிரியர்கள் பணிக்கு வந்துவிட்டதால் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் இருக்காது என்று அறிவித்தார் இணை இயக்குனர் அமுதவள்ளி.
 

 போராட்டம் வாபஸ் பெறப்பட்ட நிலையில் அனைத்துப் பள்ளி ஆசிரியர்களும் பள்ளிக்கு திரும்பிய நிலையில் பல பள்ளிகளில் ஆசிரியர்களை பணி செய்யவிடாமல் தடுக்கப்பட்டனர். கையெழுத்து போட அனுமதி மறுக்கப்பட்டனர். 31 ந் தேதி மாலை மீண்டும் அதிரடி வேட்டையை கல்வித்துறை தொடங்கியது. ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்வதை நிறுத்த வேண்டும் பழிவாங்கும் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்ற குரல் எழுந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கந்தர்வகோட்டை அலெக்சாண்டர், வெங்கடாசல், அரிமளம் ஞானக்கனி ஆகிய வட்டாரக்கல்வி அலுவலர்களை பணியிடை நீக்கம் செய்தார் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வனஜா. 

 

இந்த அதிருப்தி அடங்குவதற்குள்.. அடுத்த அதிரடியாக   அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் 43, இலுப்பூர் கல்வி மாவட்டத்தில் 159, புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 383 என மொத்தம் 585  இடைநிலை ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள், பட்டதாரிஆசிரியர்கள் என  வேலை நிறுத்த போராட்ட காலத்தில் அரசு அறிவுறுத்தியும், கல்வித்துறை உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியும் 30 ஆம் தேதி காலை  பள்ளிக்குச் செல்லாமல் இருந்ததால் கல்வித்துறை உயர்அதிகாரிகள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வனஜா ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் புதுக்கோட்டை, அறந்தாங்கி, இலுப்பூர் ஆகிய கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டக்கல்வி அலுவலர்கள் அந்தந்த ஒன்றியங்களில் வேறுபள்ளிகளுக்கு  பணியிட மாற்றம் செய்து அதற்கான ஆணையினை வட்டாரக்கல்வி அலுவலர்கள் மூலமாக உரியவர்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 
 


 இப்படி தொடர்ந்து ஆசிரியர்களை மட்டும் குறிவைத்து நடவடிக்கை எடுப்பது ஏன்?  சில ஆசிரியர்கள் நம்மிடம்..    மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வனஜா  அமைச்சர் விஜயபாஸ்கரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக ஆசிரியர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். அதாவது அமைச்சர் தயவு தனக்கு இருந்தால் தான் பிரச்சனையின்றி பணிநிறைவு ஆகலாம் என்கிறார். அதனால தான் மாஜி மாவட்ட சேர்மன் ஒருவர் அமைச்சருக்கும் கல்வி அதிகாரிக்கும் இடையே பாலமாக இருக்கிறார். எந்த நேரமும் கல்வி அலுவலகத்தில் தான் அந்த மாஜி இருப்பார். அந்த மாஜி மூத்தவர் என்பதால் அவர் சொல்வதை அமைச்சரும் மறுக்காமல் கேட்கிறார். இதை பயன்படுத்தி சங்க ரீதியாக தன்னை எதிர்க்கும் ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை பற்றி அதிகமாக புகார் வாசிக்கிறார் கல்வி அலுவலர். அதை முழுமையாக நம்பும் அமைச்சர் ஆசிரியர்கள் மீதான நடவடக்கைக்கு ஏதும் தடை சொல்லவில்லை. 

 


31 ந் தேதி அமைச்சரின் ஆதரவாளர்கள் போராட்டக்களத்திற்கே வந்து காரை போட்டு வைத்திருந்தனர். இதைப் பார்த்து பலர் அச்சப்பட்டனர். அதே போல அந்த மாஜி தற்காலிக ஆசிரியர் பணிக்காக ஒரு நீண்ட பட்டியலோடு இரவு 9 மணி வரை கல்வி துறை அலுவலகத்தில் காத்திருந்தார். ஆனால் தற்காலிக ஆசிரியர் நியமனம் இல்லை என்றதும் தான் போனார். ஆனா இப்ப பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 92 இடங்களுக்கும் தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்ங்க அமைச்சரிடம் நான் சொல்லிக்கிறேன்னு மறுபடியும் கல்வித்துறை அலுவலகத்தில் வட்டமடிக்கிறாராம்.

 


 இதையெல்லாம் அமைச்சர் விஜயபாஸ்கர் விசாரிச்சு உண்மையை தெரிஞ்சுகிட்டா இந்த நடவடிக்கைகளுக்கு அனுமதிக்கமாட்டார். ஆனால் அதுவரை அமைச்சர் பெயரால் பழிவாங்கும் நடவடிக்கை தொடரும் என்றனர்.


 

சார்ந்த செய்திகள்