கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் தமது தொகுதிக்கு உட்பட்ட அரசு அதிகாரிகளுக்கு அரசுத் திட்டங்கள் குறித்து அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அதன்படி, அவர் அதிகாரிகளிடம் கூறும்போது, “தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் மாநிலத்தின் வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாக பல்வேறு திட்டப் பணிகளை அறிமுகம் செய்து செயல்படுத்தி வருகிறார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்டு அதிமுக ஆட்சியில் கைவிடப்பட்ட அண்ணா மறுமலர்ச்சித் திட்டங்கள் உட்பட பல்வேறு திட்டங்களையும் மீண்டும் உயிர் கொடுத்து அதைச் சிறப்பாக செயல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு, செயல்பாட்டுக்கு வந்துள்ளன. அந்தத் திட்டங்களை நிறைவேற்றுவதில் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். அதன் அடிப்படையில் கிராமத்தில் 100 சதவீத வளர்ச்சியை எட்டும் வகையில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒரு கிராமம் நகரத்துக்கு இணையாக அனைத்து வளர்ச்சியையும் பெறும். இதன் மூலம் கிராமம் தன்னிறைவு அடையும்.
அந்த வகையில் இந்தத் திட்டம் மெருகேற்றப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட உள்ளது. அதே போல் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்வு செய்வதற்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் முதல்வர் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறார். அவரது எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் அரசு அதிகாரிகள் இதுபோன்ற திட்டப் பணிகளை சிறப்பாக செய்து முடிக்க வேண்டும்.
மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளிகளைத் தேர்வு செய்ய கிராம அளவில் அமைக்கப்பட்டுள்ள ஊராட்சி செயலர், மகளிர் திட்டக் குழு உறுப்பினர் உள்ளிட்ட உறுப்பினர்கள் பயனாளிகளைத் தேர்வு செய்யும்போது கட்சி பாகுபாடு இன்றி ஏழை எளிய மக்களைத் தேர்வு செய்ய வேண்டும். அவர்கள் வாழ்வு இதன் மூலம் முன்னேற்றம் அடையும் பொருளாதார அடிப்படையில் அந்தக் குடும்பம் மேம்படும். அதன் அடிப்படையில் பயனாளிகள் பட்டியலைத் தயார் செய்து மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இதன் மூலம் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியுள்ள ஏழ்மை நிலையிலுள்ள மக்களுக்குச் சென்றடையும். இதுபோன்ற திட்டங்களைச் சரியான முறையில் நிறைவேற்றிட அரசுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு தர வேண்டும்” என அதிகாரிகளுக்கு தனது அறிவுறுத்தலை தெரிவித்துள்ளார். அரசின் மக்கள் நலத் திட்டங்கள் எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்படுகிறதோ அதன்படி முறையான பயனாளிகளுக்குச் சென்று சேர வேண்டும் என்பதில் எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் கண்ணும் கருத்துமாக இருந்து வருவதாக தொகுதி மக்கள் கூறுகின்றனர்.