Skip to main content

தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத் தலைவராக ஓய்வுபெற்ற  நீதிபதி பாஸ்கரன் நியமனம்! 

Published on 31/12/2020 | Edited on 31/12/2020

 

Retired Judge Baskaran appointed as Tamil Nadu State Human Rights Commission Chairman


தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத் தலைவராக, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பாஸ்கரனை நியமித்து, தமிழக ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.


தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத் தலைவராக இருந்த மேகாலயா உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி மீனாகுமாரியின் பதவிக்காலம், கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிந்தது. அதன்பின், ஆணைய உறுப்பினராக இருந்த நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் பொறுப்புத் தலைவராகக் கடந்த பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டார்.

 

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையச் சட்டப்படி, முதல்வர், சபாநாயகர், உள்துறை அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் அடங்கிய குழு, மனித உரிமை ஆணையத் தலைவர் பதவிக்குத் தகுதியானவர்களைப் பரிந்துரைக்க வேண்டும்.
 

இதுசம்பந்தமாக விவாதிக்க, கடந்த வாரம் நடந்த கூட்டத்தை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் புறக்கணித்திருந்தார். தகுதியானவரை இப்பதவியில் நியமிக்கவேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் அரசை வலியுறுத்தியிருந்தனர்.


இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.பாஸ்கரனை, மாநில மனித உரிமை ஆணையத் தலைவராக நியமித்து, தமிழக ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இவர் மூன்று ஆண்டுகள்  வரை இப்பதவியில் நீடிப்பார் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

செந்தில் பாலாஜி கைது விவகாரம்; அமலாக்கத்துறைக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

Published on 20/06/2023 | Edited on 20/06/2023

 

Senthilbalaji Arrest Case; Human Rights Commission notice to enforcement department

 

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். அதேசமயம் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு நீதிமன்றத்தின் அனுமதியோடு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு நாளை காலை அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் அமலாக்கத்துறையிடம் அறிக்கை கேட்டுள்ளது.

 

செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட பொழுது மனித உரிமை மீறப்பட்டிருப்பதாகவும், உரிய நடைமுறைகள் பின்பற்றப்படாமல் அவர் கைது செய்யப்பட்டதாகவும், அவருடைய கைது குறித்து அவருடைய மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கவில்லை என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பான புகாரை விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணையம் ஆறு வார காலத்திற்குள் அமலாக்கத்துறையில் இணை ஆணையர் பொறுப்பில் இருக்கக்கூடிய அதிகாரி இதற்கு உரிய விளக்கமான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

 

 

 

Next Story

கார்த்தி ரசிகரைத் தாக்கிய போலீசாருக்கு ரூ. 2 லட்சம் அபராதம்; மனித உரிமை ஆணையம் அதிரடி

Published on 18/06/2022 | Edited on 18/06/2022

 

Thoothukudi police fined Rs 2 lakh each for attacking Karthi fans

 

கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் கார்த்தி மற்றும் நாகர்ஜுனா நடிப்பில் வெளியான படம் தோழா. தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெளியீட்டின் போது தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கார்த்தி ரசிகர் மன்றத்தினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அப்போது  அவ்வழியாக சென்ற தூத்துக்குடி போலீசார் போஸ்டர் ஒட்டியதற்காக கார்த்தி ரசிகர் மன்றத்தினரிடம் லஞ்சம் கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் தர மறுத்துள்ளனர்.

 

இதனால் ஆத்திரமடைந்த போலீசார் மன்றத்தின் தலைவர் வெங்கடேஷ் மற்றும் நிர்வாகிகள் வெங்கடகொடி, சீனிவாஸ் ஆகிய மூவர் மீதும் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக கார்த்தி ரசிகர் மன்றத்தின் சார்பாக மனித உரிமை ஆணையத்தில் புகார் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

 

இந்த மனுவை விசாரித்த மனித உரிமை ஆணையம், இந்த விவகாரத்தில் போலீசார்கள் மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளது நிரூபணமாகியுள்ளது என்றும், பாதிக்கப்பட்ட வெங்கடகொடிக்கு ரூ. 5 லட்சமும், வெங்கடேஷ் மற்றும் சீனிவாஸ் ஆகிய இருவருக்கும் தலா ரூ. 50 ஆயிரம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.  மேலும் இவர்கள் மீது தாக்குதல் நடத்திய 3 போலீசாருக்கும் தலா ரூ. 2 லட்சம் அபராதம் விதித்ததுடன் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.