சேலம் இரும்பாலையை தனியார் ஒப்பந்தம் எடுப்பதற்கான கால அவகாசத்தை மேலும் 20 நாள்களுக்கு நீட்டித்து செயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் மத்தியில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய பொதுத்துறை நிறுவனமான செயில்(SAIL) கட்டுப்பாட்டில் இரும்பு, உருக்கு தயாரிக்கும் ஆலைகள், இரும்பு மூலப்பொருள்கள் எடுக்கும் சுரங்கங்கள் உள்ளன. இதில் 3 சிறிய ஆலைகளை தனியாருக்கு விற்பனை செய்ய செயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதற்காக கடந்த ஜூலை 4ம் தேதி, தனியாரிடம் ஒப்பந்தம் கோரும் அறிவிப்பாணையை வெளியிட்டது. இதன்படி சேலம் இரும்பாலை, மேற்குவங்கத்தில் உள்ள அலாய் உருக்காலை, கர்நாடகாவில் உள்ள விஸ்வேஸ்வரய்யா உருக்காலை ஆகிய மூன்று ஆலைகளையும் விற்க உலகளாவிய ஒப்பந்தத்தை செயில் கோரியது. மேற்சொன்ன மூன்று பொதுத்துறை ஆலைகளையும் தனியாருக்கு விற்கும் முடிவுக்கு தொழிலாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அரசியல் கட்சியினர், தொழிற்சங்கத்தினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்கக்கூடாது என கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த ஒப்பந்தம் கோரப்பட்ட பின், உடனடியாக அதனை நிறுத்தி வைக்கக்கோரி தொழிற்சங்க நிர்வாகிகள், அனைத்துக்கட்சி தலைவர்கள், மத்திய அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள், சேலம் இரும்பாலையை விற்கக்கூடாது என வலியுறுத்தி பேசியுள்ளனர்.
இந்நிலையில் சேலம் இரும்பாலை உள்பட மூன்று ஆலைகளையும் விற்க கோரப்பட்ட ஒப்பந்தத்தின் காலம் ஆகஸ்ட் 1, 2019ம் தேதியுடன் முடிந்தது. ஆனால் போதிய விண்ணப்பங்கள் வராததால், இதன் விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை மேலும் 20 நாள்களுக்கு அதாவது ஆகஸ்ட் 20ம் தேதி வரை நீட்டித்து செயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், ''சேலம் இரும்பாலை உள்ளிட்ட எந்த ஒரு பொதுத்துறை ஆலைகளையும் தனியாருக்கு விற்கக்கூடாது என்று போராடி வருகிறோம். ஆனால் மத்திய அரசு இவ்விவகாரத்தில் எங்கள் கோரிக்கைகளை கேட்காமல் செயல்படுகிறது. நாங்கள் எங்கள் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம்,'' என்றனர்.