Skip to main content

ஓய்வுபெற்ற ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை முதல்வருடன் சந்திப்பு!

Published on 14/06/2024 | Edited on 14/06/2024
Retired ATSP Meeting with the Chief Minister of Vellaturai!

தமிழகத்தின் முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சி காலத்தின்போது ஐ.ஜி.விஜயகுமார், சந்தன கடத்தல் வீரப்பனை ஒடுக்கும் பணியில் அமர்த்தப்பட்டவர். அப்போது அவரது குழுவில் இருந்தவர் தூத்துக்குடி மாவட்டத்தின் வல்லநாட்டைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் வெள்ளத்துரை. இவர், வீரப்பனைச் சுட்டுக் கொன்றதால் இரட்டைப் பதவி உயர்வு பெற்று கூடுதல் ஏ.டி.எஸ்.பி.யானவர். இவர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் ஆல்வின் சுதன் வழக்கில் கைதான ரவுடி, மற்றும் மதுரையில் எஸ்.ஐ.க்களைக் குத்திய ரவுடிகளை என்கவுண்டர் செய்ததில் ‘என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்’ எனப் பெயர் பெற்றவர் ஆவார்.

அதே போல் 2003 ஆம் ஆண்டில் சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடியான அயோத்திக்குப்பம் வீரமணியை என்கவுண்டர் செய்துள்ளார். மேலும், புதுக்குளம் பாரதி, பிரபு ஆகியோர் வெள்ளத்துரையால் சுட்டுக்கொல்லப்பட்டனர். தற்போது திருவண்ணாமலை குற்ற ஆவணக் காப்பக ஏ.டி.எஸ்.பியாக வெள்ளத்துரை பணியாற்றி வந்தார். இதனையடுத்து இவர் திடீரென்று கடந்த மாதம் 30 ஆம் தேதி (30.05.2024) பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இவர் மீதான என்கவுண்டர் வழக்கு சிபிசிஐடியில் நிலுவையில் உள்ளது. இதனிடையே, கடந்த 2013 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில், போலீஸ் காவலில் நடந்த மரணம் தொடர்பான விசாரணை முடிவில் இந்தப் பணியிடை நீக்க நடவடிக்கை செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. 

Retired ATSP Meeting with the Chief Minister of Vellaturai!

சிபிசிஐடி பிரிவில் வெள்ளத்துரை மீது வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் உள்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. ஏ.டி.எஸ்.பி வெள்ளத்துரை கடந்த 31 ஆம் தேதி (31.05.2024) பணி ஓய்வு பெற இருந்த நிலையில் தமிழ்நாடு அரசு அவரை பணியிடை நீக்கம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து வெள்ளத்துரை பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உத்தரவை உள்துறை அமைச்சகம் ரத்து செய்தது. இதற்கான உத்தரவை செயலாளர் அமுதா பிறப்பித்திருந்தார். அரசு சார்பில் வெளியிடப்பட்ட அந்த உத்தரவில், “ஏடிஎஸ்பி வெள்ளத்துரை மீதான மனித உரிமை ஆணையத்தில் உள்ள வழக்குகள் தொடர்பாக ஓய்வூதிய பலன்களில் ரூ.5 லட்சம் பிடித்தம் செய்து, பணி ஓய்வு பெற அனுமதிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியான வெள்ளத்துரை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசியுள்ளார். ஓய்வு பெறுவதற்கு ஒரு நாள் முன்னர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உடனடியாக அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்தச் சந்திப்பு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இவர் கடந்த 1997 ஆம் ஆண்டு உதவி ஆய்வாளராக தமிழக காவல்துறையில் பணிக்கு சேர்ந்தது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்