தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை விரைந்து விசாரிக்க தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது, நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வழங்கியதில் 4,800 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகவும், இது தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, வழக்கு தொடர்ந்தார்.
இதை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக, சிபிஐ விசாரணை நடத்தலாம் என்றும், தேவைப்பட்டால் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யலாம் என்றும் கூறியிருந்தது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இது தொடர்பாக, நோட்டீஸ் மட்டும் அனுப்பட்ட நிலையில், வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை.
இந்நிலையில், இவ்வழக்கை விரைந்து விசாரித்து முடிக்குமாறு லஞ்ச ஒழிப்புத்துறைச் சார்பில் முறையிடப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்காக பட்டியலிடப்படும் என்றும், ஆனால், எந்த தேதியில் விசாரணை என்பதைக் கூற முடியாது என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்தார்.