சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை. வளாகத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக சங்கங்களின் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார்.
இதில் அண்ணாமலைப் பல்கலைக்கழக அயர் பணி பேராசிரியர்கள் நலச்சங்கம், அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணி நிறைவு ஊழியர் சங்கம், பல்கலைக்கழக பணி நிறைவு ஊழிய நலச் சங்கம், கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஊழிய நலச்சங்கம் உள்ளிட்ட 8 சங்கங்களின் முக்கிய நிர்வாகிகள் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்கட்டமைப்புகளுக்கு ஏற்ப மாணவர் சேர்க்கை இல்லை, எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து வருவதால் பல்கலைக்கழகத்தில் நிதி சிக்கல் மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளது, எனவே மாணவர்கள் சேர்க்கையில் உரிய கவனம் செலுத்தி மாணவர் சேர்க்கை அதிகரிக்க உடனடியாக நடவடிக்கையை பல்கலைக்கழக நிர்வாகம் எடுக்க வேண்டும், ஒவ்வொரு துறைக்கும் ஆராய்ச்சி நிதியை பெறுவதற்கான இலக்கை நிர்ணயத்து நிதி வழங்கும் அமைப்புகளிடமிருந்து நிதியைப் பெற்று ஆராய்ச்சி நிலையை உயர்த்த வேண்டும். கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பலன்களை நிதி பற்றாக்குறை காரணமாக நிறுத்தி வைத்துள்ளதை ரத்து செய்து உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்,உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானத்தின் நகலை கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் ஊர்வலமாக சென்று துணைவேந்தரின் செயலாளரிடம் அளித்தனர் வரும் 18-ஆம் தேதிக்குள் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பல்கலைக்கழகத்தில் அனைத்து தரப்பு ஆசிரியர் மற்றும் ஊழியர்களை ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என கூட்டமைப்பு தலைவர் மதியழகன் அறிவித்துள்ளார்.