Skip to main content

புகழ்பெற்ற காட்டுயிர் ஆய்வாளர் மாரடைப்பால் மரணம்!

Published on 02/03/2025 | Edited on 02/03/2025

 

Renowned wildlife researcher ajith kumar passed away

புகழ்பெற்ற காட்டுயிர் ஆய்வாளர் முனைவர் அஜித் குமார் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். 

குரங்கினங்கள் பற்றிய தென் இந்தியாவின் முன்னோடி ஆய்வாளரான இவர் 1970 -களில் சோலை மந்திகள் எனப்படும் சிங்கவால் குரங்குகள் பற்றிய ஆய்வை மேற்கொண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இந்தியக் காட்டுயிர் நிறுவனம் ( WII), சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம் ( SACON) ஆகியவற்றில் உயிரியலாளராகப் பணியாற்றியுள்ளார். பெங்களூருவில் உள்ள உயிரியல் அறிவியலுக்கான தேசிய மையத்தின் ( NCBS) காட்டுயிரியல் மற்றும் பாதுகாப்பு பற்றிய முதுகலை பாடத் திட்டத்தின் இயக்குனராக கடந்த 2003 முதல் 2020 வரை பணியாற்றி இருக்கிறார். நாடெங்கிலும் நூற்றுக் கணக்கான காட்டுயிர் ஆய்வாளர்களை உருவாக்கி, தற்போது பெங்களூருவில் உள்ள காட்டுயிர் கல்வி மையத்தில் (CWS)  அறிவியலாளராகப் பணியாற்றி வந்தவர். 

அஜித் குமார் தனது மாணவர்களோடு இணைந்து  ஊர்வன மற்றும் நீர்நில வாழ்வன, சிறு ஊனுண்ணி விலங்குகள், மரம் வாழ் பாலூட்டிகள், பறவைகள் ஆகியவை பற்றிய பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டிருக்கிறார். மலைக் காடுகளின் உயிர்ச் சூழல் பற்றிய இவரது  ஆய்வுகள் பெரும் கவனம் பெற்றவை. தென் இந்தியா மட்டுமன்றி இமயமலைப் பகுதிகளிலும் இவரது ஆய்வுப் பணிகள் நடைபெற்றுள்ளன.  சக உயிரியலாளர்களுடன் இணைந்து  காட்டுயிர்கள் பற்றிய பல ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று(01.03.2025) மத்தியப் பிரதேசத்தில் உள்ள பச்மார்கி பகுதியில் மாணவர்களோடு ஒரு மலையேற்றத்திற்குத் தயாரானபோது, திடீரென ஏற்பட்ட மாரடைப்பில் மரணமடைந்துள்ளார்.  கையில் தொலைநோக்கியுடன் ( binocular) கண்கள் வானகத்தைப் பார்த்தவாறு  உயிர் பிரிந்திருக்கிறது. அஜித்குமாரின் இழப்பு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  பலரும் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்