பாஜகவிற்கு எதிராக அணி சேர்வதற்கான மாபெரும் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்பிய திமுக தலைவர் ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
நாட்டின் பொருளாதாரத்தின் மீது நடத்தப்பட்டு இருக்கக்கூடிய சர்ஜிகல் ஸ்ட்ரைக் என்ற நிலையில்தான் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. ஆகவே குறைந்தபட்ச செயல் திட்ட அடிப்படையில் மினிமம் காமன் ப்ரோக்ராம் எனும் அடிப்படையில் இந்த அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நான் பேசுகிறபோது குறிப்பிட்டு சொன்னேன்.
ஒட்டுமொத்தமாக அரசியலுக்கு அப்பாற்பட்டு கட்சி பேதங்களை மறந்து நமக்குள் இருக்கக்கூடிய சிறுசிறு பிரச்சினைகள், மன சாடல்கள் எதுவாக இருந்தாலும் அவைகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு மத்தியிலே ஒரு பாசிச ஆட்சி மதவெறிபிடித்த ஆட்சியை நாம் உணர்ந்து பார்த்து அந்த ஆட்சியை அப்புறப்படுத்துவதற்கான முயற்சியில் உண்மையாக ஒரு மெகா கூட்டணி அமைத்து போராட வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்னுடைய கருத்துகளை நான் வெளிப்படுத்தி இருக்கிறேன்.
நேற்றைய தினம் சோனியா காந்தி அவர்களையும் ராகுல் காந்தி அவர்களையும் சந்தித்து நேரத்திலேயே மேகதாது அணை பற்றி பேசினேன் அவரும் சம்பந்தப்பட்ட மாநிலத்தை சார்ந்திருக்கக்கூடிய முதலமைச்சரிடம் பேசுவதாக என் இடத்தில் உறுதி தந்தார். அதை தொடர்ந்து இன்று கூட்டத்திற்கு வருகை தந்த முன்னாள் பிரதமர் தேவகவுடா அவர்களை சந்தித்த போதும் இது பற்றி நான் பேசி இருக்கிறேன் எனக் கூறினார்.