உச்சநீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வரவேற்கிறோம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஆணவக் கொலைகளைத் தடுப்பது தொடர்பாக முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு ஒன்றை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. அதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். இந்தத் தீர்ப்பை ஏற்று நடைமுறைப்படுத்துமாறு மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம்.
‘வயதுவந்த இருவர் மனம் ஒப்பித் திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்தால் அதற்கு குடும்பத்தின் அனுமதியோ, சாதி, சமூகம் ஆகியவற்றின் அனுமதியோ தேவை இல்லை’ எனத் தெளிவாகக் கூறியிருக்கும் உச்சநீதிமன்றம், ஆணவக் கொலையைத் தடுப்பதற்காகவும், அதனால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காகவும், அந்தக் குற்றத்தில் ஈடுபடுகிறவர்களைத் தண்டிப்பதற்காகவும் சிறப்பு சட்டம் ஒன்றைப் பாராளுமன்றம் இயற்றவேண்டும் எனப் பரிந்துரை செய்திருக்கிறது. அப்படியான சட்டம் இயற்றப்படும் வரை மத்திய மாநில அரசுகள் கடைபிடிக்கவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது.
தடுப்பு நடவடிக்கைகள், நிவாரண நடவடிக்கைகள், தண்டிக்கும் நடவடிக்கைகள் என மூன்று தலைப்புகளில் வழிகாட்டு நெறிமுறைகளை உச்சநீதிமன்றம் அளித்திருக்கிறது. சாதி பஞ்சாயத்துகளைத் தடுப்பதற்கு சிஆர்பிசி 144 பிரிவின்கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கலாம், பிரிவு 151ன் கீழ் கைதும் செய்யலாம் எனக் கூறியிருக்கும் உச்சநீதிமன்றம், கலப்பு மணத் தம்பதிகளைப் பாதுகாக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை உள்ளடக்கிய சிறப்புப் பிரிவையும் அந்தத் தம்பதிகள் அச்சமின்றி தங்கியிருக்க பாதுகாப்பு இல்லங்களையும் ஏற்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
ஆணவக் குற்றங்களைத் தடுக்கத் தவறும் அதிகாரிகள்மீது துறைசார்ந்த நடவடிக்கை எடுத்துத் தண்டிக்கவேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. இந்த உத்தரவு இனிமேல் பதியப்படும் வழக்குகளுக்கு மட்டுமின்றி ஏற்கனவே கிடப்பில் இருக்கும் வழக்குகளுக்கும் பொருந்தும் என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியிருக்கிறது. இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்ட தேதியிலிருந்து ஆறு வாரங்களுக்குள் அனைத்து மாநில அரசுகளும் இதை நடைமுறைப் படுத்தவேண்டும் எனவும் கண்டிப்போடு உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.
ஆணவக் கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு இருப்பதை அனைவரும் அறிவோம். உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலை வழக்கு உலக அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருப்பதை மறுக்கமுடியாது. எனவே உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை உடனடியாக நிறைவேற்றுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
ஆணவக் குற்றங்களைத் தடுக்கவும் உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை செயல்படுத்தவும் வலியுறுத்தி அனைத்து சனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து குரலெழுப்புமாறு தோழமையோடு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.