தமிழகத்தில் இரண்டாம் அலை கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும்பாலும் ரெம்டெசிவிர் மருந்து பரிந்துரைக்கப்படுகிறது. ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தனியார் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளின் உறவினர்களை வெளியில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை வாங்கி வர பரிந்துரைக்கின்றனர். ஒரு டோஸ் ரெம்டெசிவிர் 1,500 ரூபாய் என இருக்கும் நிலையில் கள்ளச் சந்தையில் அதன் விலை பல்லாயிரக்கணக்கில் கூடி உள்ளது. இதனால் ரெம்டெசிவிர் மருந்து விற்கும் மையங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக் கல்லூரியில் மட்டும் ரெம்டெசிவிர் மருந்து கிடைத்துவந்த நிலையில் தமிழகத்தின் மதுரை, கோவை, சேலம், நெல்லை, திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படும் எனத் தமிழக சுதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கோவை மற்றும் மதுரையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடங்கிய நிலையில், தற்பொழுது திருச்சி அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடங்கியுள்ளது. தினமும் 300 முதல் 350 ரெம்டெசிவிர் மருந்துகள் விற்கப்படும் என திருச்சி அரசு மருத்துவமனை டீன் வனிதா தெரிவித்துள்ளார்.