Skip to main content

திருச்சியில் செஞ்சிலுவைச் சங்கம் எங்கே? தேடும் சமூக ஆர்வலர்கள்

Published on 11/05/2020 | Edited on 11/05/2020

 

r

உலகளவில் பேரிடர்கள், யுத்தங்கள் நடைபெறுகின்ற பகுதிகளில் உதவிடும் பொருட்டு கடந்த 1863 - ஆம் ஆண்டு ஹென்றி டுனான்ட் என்பவரின் முயற்சியால் சர்வதேசச் செஞ்சிலுவைக் குழு உருவாக்கப்பட்டது.
 

அந்தக்குழு 1864- ஆம் ஆண்டு பல்வேறு சங்கங்களையும் இணைத்து ஜெனிவா சாசனத்தை உருவாக்கியது. அந்த அமைப்புக்கென தனிக் கொடியும் உருவாக்கினர். சர்வதேசச் செஞ்சிலுவைக் குழு, ஆயுத மோதல்களாலும் உள்நாட்டு கலவரங்களாலும் பாதிக்கப்படும் மக்களுக்கு நடுநிலையோடு உதவுகின்ற ஒரு மனிதநேய அமைப்பாகவும் அனைத்து நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு அமைப்பாகவும் இருந்து வருகிறது.

 
சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்க சம்மேளத்தில் 192 சங்கங்கள் அமைந்துள்ளன. இந்த சங்கங்கள் உலகளவில் ஜெனிவாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கினாலும், உலக நாடுகள் அனைத்திலும் அதன் கிளைகள் அமைக்கப்பட்டுள்ளன.

 
இந்தியாவில் 1920- ஆம் ஆண்டு இந்திய செஞ்சிலுவைச் சங்கம் துவங்கப்பட்டது. இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் கிளைகள் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் உருவாக்கப்பட்டன. மாவட்ட அளவிலான சங்கத்திற்கு அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள், சங்கத்தின் தலைவராக இருந்து வழி நடத்துவார். கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் என பலதரப்பட்டவரும் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

 
சமூக அக்கறையும், உதவும் மனப்பான்மையும், பேரிடர் காலங்களை எதிர்கொண்டு அமைப்பை வழிநடத்தும் திறன் கொண்ட ஒரு நபர் அமைப்பின் செயலாளராகப் பொறுப்பு ஏற்பதும் வழக்கம். மாவட்ட ஆட்சியர் அவர்களுக்குப் பல்வேறு நிர்வாகப் பணிகள் இருப்பதால், செஞ்சிலுவைச் சங்க நிர்வாகச் செயல்பாடுகள் மாவட்ட ஆட்சியரின் ஆலோசனையின் பெயரில் அமையும்.
 

பல்வேறு மாவட்டங்களில் செஞ்சிலுவைச் சங்க செயல்பாடுகள் பாராட்டும் படியாக அமைந்திருந்தாலும், திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை அப்படியொரு அமைப்பு இருக்கிறதா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. 
 

திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை செஞ்சிலுவைச் சங்கத்தின் அலுவலகம் எங்கே இருக்கிறது? அதன் நிர்வாகிகளாக யார்? யார்? இருக்கிறார்கள் என்பது கூட தெரியவில்லை.
 

புதிதாக அமைப்பில் எப்போது உறுப்பினர் பதிவு நடைபெற்றது என்பதும் தெரியவில்லை. அலுவலகம் என்று ஒன்று இருந்தால், அதில் சமூக ஆர்வலர்கள் செஞ்சிலுவைச் சங்கத்தில் தங்களை இணைத்துக் கொள்ள முன் வருவார்கள். அதற்கு வழிவிடாமல், தற்போது பொறுப்பில் இருக்கும் நிர்வாகிகள் அப்படி ஒரு அமைப்பு இருப்பதையே காட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை.
 

http://onelink.to/nknapp

 

மாவட்ட செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் என்ற முறையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் சங்கத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்த்து புதிய நிர்வாகிகளை நியமித்து செயல்பாடுகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்பதே திருச்சியின் சமூக ஆர்வலர் ஆ.வையாபுரி, உள்ளிட்டோர் கோரிக்கையாக வைத்துள்ளனர்.  

 

 

சார்ந்த செய்திகள்