Skip to main content

என்.எல்.சி.யில் ஆட்சேர்ப்பு; தேர்வு தொடங்கிய 15 நிமிடங்களில் தேர்வர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி

Published on 17/12/2023 | Edited on 17/12/2023
Recruitment in NLC; A shock awaited the candidates within 15 minutes of the examination

நெய்வேலி என்எல்சி நிர்வாகம் நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, மந்தாரக்குப்பம், கம்மாபுரம், வளையமாதேவி உள்ளிட்ட நெய்வேலி சுற்று வட்டப் பகுதியில் 50க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் உள்ள நிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளைக் கையகப்படுத்தி என்எல்சிக்கு தேவையான நிலக்கரியைத் தோண்டி எடுத்து மின்சாரம் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது. அதே சமயம் என்எல்சி நிர்வாகத்திற்கு இடம் கொடுத்தவர்கள் வேலை கேட்டும் உரிய இழப்பீடு வழங்காததால் தொடர்ந்து இன்று வரை போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களுக்கு ஆதரவாகப் பல்வேறு அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் என்எல்சி நிர்வாகத்திற்கு இடம் கொடுத்த வாரிசுகளுக்கு சுரங்க எந்திரங்கள் தொழிற்பயிற்சிக்கு (இண்டஸ்ட்ரியல் ட்ரைனிங்) என்ற பதவிக்கு ஆள் எடுப்பதற்காகத் தேர்வு அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இதற்கான தேர்வு டிசம்பர் 17 ஆம் தேதி 10 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில் நிலம் கொடுத்தவர்களின் வாரிசுதாரர்கள் 600க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்கள் தேர்வுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக 9:00 மணிக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் தேர்வு மையத்திற்கு வந்து சேர்ந்தனர். தேர்வு மையத்திற்கு சரியான போக்குவரத்து ஏற்பாடு இல்லாததால் தேர்வர்கள் பல நூறு ரூபாய்களை செலவு செய்து ஆர்ச் கேட்டிலிருந்து தேர்வு மையத்திற்கு ஆட்டோக்களில் வந்துள்ளனர். இந்த நிலையில் தேர்வு சரியாக பத்து மணிக்கு தொடங்கியபோது விடைத்தாள் வழங்கப்பட்டுள்ளது. பின்னர் வினாத்தாளும் வழங்கியுள்ளனர்.

தேர்வில் கலந்து கொண்ட அனைவரும் 15 நிமிடம் தேர்வை எழுதியுள்ளனர். திடீரென தேர்வு ரத்து செய்யப்பட்டதாகத் தேர்வு நடத்தும் அலுவலர்கள் தெரிவித்து தேர்வர்களின் கையில் இருந்த கேள்வித்தாள் விடைத்தாள் மற்றும் நுழைவுச் சீட்டு ஆகியவற்றை வாங்கிக்கொண்டு வெளியே அனுப்பியுள்ளனர். இது குறித்து சரியான விளக்கம் எதுவும் அளிக்காததால் தேர்வர்கள் அனைவரும் விரக்தி அடைந்து வேதனையில் வெளியே வந்தனர். பல ஆண்டுகளாகப் போராடி என்எல்சி நிறுவனத்திற்கு நிலம் கொடுத்த வாரிசுதாரர்களுக்கு தற்போதுதான் இன்டஸ்ட்ரியல் ட்ரைனிங் என்ற பதவிக்குத் தேர்வு நடைபெற்றது. அதையும் தற்போது ரத்து செய்துவிட்டார்களே என்ற வேதனையில் அடுத்து எப்போது இதுபோன்று அறிவிப்பார்களோ? என்ற ஏக்கத்தில் வந்த வழியே பார்த்து அனைவரும் சென்றனர்.

Recruitment in NLC; A shock awaited the candidates within 15 minutes of the examination

இதுகுறித்து என்எல்சி நிறுவன மக்கள் தொடர்புத் துறை துணை பொது மேலாளர் கல்பனா தேவி கூறுகையில், “சிறப்பு சுரங்க எந்திரங்கள் தொழிற் பயிற்சிக்கான எழுத்து தேர்வு நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரியில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. இதில் ஆங்கிலம் மற்றும் தமிழில் வினாத்தாள்கள் வழங்கப்பட்டது. தேர்வு நடத்தும் பொறுப்பை வெளி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. தேர்வு மையத்தில் விடைத்தாள்கள், கேள்வித்தாள்கள் விநியோகிக்கப்பட்டது. அப்போது வினாத்தாள்களில் தமிழாக்கம் சரியாக மொழிபெயர்க்காமல் இருந்தது தெரியவந்தது அதில் தவறு அதிகம் இருந்தது. எனவேதான் இப்படியே தேர்வை நடத்தினால் தவறாக மாறிவிடும். எனவே இதனைத் தொடர்ந்து தேர்வு ரத்து செய்யப்பட்டது. பின்னர் விரைவில் மறு தேதிக்கு ஒத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது. உடனே விண்ணப்பதாரர்களிடமிருந்து அழைப்பு கடிதங்கள், விடைத்தாள் மற்றும் கேள்வித்தாள்கள் சேகரிக்கப்பட்டது. உரிய அறிவிப்புடன் தேர்வு விரைவில் நடத்தப்படும்” எனக் கூறினார். 

சார்ந்த செய்திகள்