சென்னை திருவான்மியூர் அருகில் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் ரியல் எஸ்டேட் அதிபரை அவரது நண்பர்களே கடத்தி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவான்மியூர் பகுதியில் வசித்து வந்தவர் கலியமூர்த்தி(55). இவர் அப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். இவர் தொழில் தொடங்கும் போது, பரமசிவம், முத்து, தர்மா, செந்தில் ஆகியோர் பார்ட்னர்களாக உடன் இருந்துள்ளனர்.
இந்நிலையில், திடீரென கடந்த 16-ம் தேதி வீட்டை விட்டு வெளியேச் சென்ற கலியமூர்த்தி அதன் பின் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது மனைவி ஹேமா திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஹேமா அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் காணாமல் போன கலியமூர்த்தி குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, கடைசியாக கலியமூர்த்தி திருவான்மியூர் ஜெயந்தி தியேட்டர் சிக்னல் அருகே இருந்ததாக அவரது செல்போன் சிக்னல் காட்டியது. அதை வைத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்தபோது ஸ்கார்ப்பியோ கார் ஒன்றில் கலையமூர்த்தி வலுக்கட்டாயமாக ஏற்றப்பட்டு கடத்தப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் கலிய மூர்த்தியை செல்போனில் தொடர்பு கொண்டவர்கள் பதிவு விவரங்களை சேகரித்தனர்.
இதில் கலியமூர்த்தியின் தொழில் பார்ட்டனர்கள் முத்து, மணிகண்டன் மீது சந்தேகம் ஏற்பட்டு அவர்களை பிடித்து விசாரித்தபோது கலியமூர்த்தி குறித்து முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறியுள்ளனர். இதையடுத்து சந்தேகம் வலுக்கவே போலீசார் கிடுக்குபிடி கொடுக்க கலியமூர்த்தி குறித்த அதிர்ச்சி தகவல்களை அவர்கள் தெரிவித்தனர்.
கலியமூர்த்தியுடன் நாங்களும் பார்டனர்களாக இணைந்து ரியல் எஸ்டேட் தொழில் தொடங்கி நடத்தி வந்தோம். தொழிலும் நன்றாக தான் சென்றது. ஆனால், கலியமூர்த்தியுடன் மற்ற சக பார்ட்னர்களான பரமசிவம், முத்து, தர்மா, செந்தில் ஆகியோருக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்துள்ளது.
இதனால் கலியமூர்த்தி மீது அவர்கள் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளனர். கலியமூர்த்தியும் தரவேண்டிய பணம் குறித்து சரியாக பதிலளிக்காததால் கலியமூர்த்தியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்படி, கலியமூர்த்திக்கு சந்தேகம் வராதபடி செல்போனில் தொடர்பு கொண்டு திருவான்மியூர் சிக்னல் அருகே வரும்படி கூறியுள்ளனர்.
அங்கு வந்த கலியமூர்த்தியை செந்திலுக்கு சொந்தமான ஸ்கார்பியோ காரில் கடத்தியுள்ளனர். பின்னர் காரில் வைத்தே 4 பேரும் சேர்ந்து கலியமூர்த்தியை கடுமையாக தாக்கி, பெல்டால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் அவரது பிணத்தை ஈசிஆர் ஆலையில் முட்புதரில் புதைத்துவிட்டு எதுவும் நடக்காதது போல் அங்கிருந்து கிளம்பி சென்றுள்ளனர்.
கலியமூர்த்தியை அவரது நண்பர்களே கடத்தி கொலை செய்தது போலீசின் தீவிர விசாரணையாலே தெரிய வந்தது. இதையடுத்து, கொலைக்கு காரணமான முத்து, சிவம், மணிகண்டன் உள்ளிட்ட மூவரை பிடித்த போலீஸார் அவர்களை கலியமூர்த்தி புதைக்கப்பட்ட இடத்திற்கு அழைத்துச்சென்று உடலை கைப்பற்றியுள்ளனர்.