தேர்தல் நேரத்தில் பல கூத்துகள் நடக்கும் அதில் ஒன்று தான் ஆளுங்கட்சியான அதிமுக வேட்பாளர் எதிர்கட்சியான திமுகவில் இணைந்துவிட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் எப்பவுமே பதற்றமானது தான். இந்த தேர்தலிலும் பதற்றத்திற்கு பஞ்சமில்லை.
மணமேல்குடி பரணி கார்த்திகேயன்.. மன்னார்குடி குடும்பத்திற்கு நெருக்காமானவர். அதிமுகவில் இருந்து ஒன்றிய சேர்மன் அவர் மனைவியும் சேர்மனாக இருந்தார். ஜெ மறைவுக்கு பிறகு தினகரன் அணிக்கு மாறி மா.செ பொறுப்பு வகித்தார். தற்போது திமுக வில் இணைந்துள்ளார். இவரது அண்ணன் ரெத்தினசபாபதி அறந்தாங்கி அதிமுக எம்.எல்.ஏ தினகரனுடன் கொஞ்சக் காலம் பயணித்துவிட்டு மீண்டும் அதிமுகவில் இணைந்துவிட்டார்.
இந்தநிலையில்தான் உள்ளாட்சித் தேர்தலில் மணமேல்குடி ஒன்றியக் குழுவில் இரு கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்திய நிலையில் 14 வது வார்டில் திமுக வேட்பாளராக பரணி கார்த்திகேயனும், அதிமுக வேட்பாளராக நாராயணனும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 19 ந் தேதி அதிமுக வேட்பாளர் நாராயணன் தனது வேட்பு மனுவை வாபஸ்பெற மனு கொடுத்தபோது அதிமுக ஒ.செ அந்த மனுவை பறித்து கிழித்துவிட்டதால் அதிமுக - திமுக மோதல் ஏற்பட்டது.
மேஜை நாற்காலிகள் உடைக்கப்பட்டது. நள்ளிரவு வரை பதற்றம் நிலவியது. அதனால் நாராயணன் மனு வாபஸ் பெற முடியவில்லை. இந்த நிலையில் தான் இன்று திமுக தெற்கு மா செ (பொ) ரகுபதி எம்.எல்.ஏ முன்னிலையில் அதிமுக வேட்பாளர் நாராயணன் திமுகவில் இணைந்தார். கூடவே பரணி கார்த்திகேயனும் இருந்தார்.
இது குறித்து அதிமுக வேட்பாளர் நாராயணன் கூறும் போது.. வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு ஓட்டுக் கேட்கப் போனால் மக்களிடம் திமுகவுக்கு தான் ஆதரவு அதிகமாக இருந்தது. அதனால நாம் போட்டியிடுவது தேவையில்லைனு வெற்றி பெறும் கட்சியில் இணைந்துவிட்டேன் என்றார்.