திருப்புவனம் இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் கைதான தென்காசி வாலிபரின் வீட்டில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தினர்.
திருப்புவனம் இந்து முன்னணி பிரமுகர் ராமலிங்கம் கொலை தொடர்பாக தென்காசியில் கைது செய்யப்பட்ட அகமது சாலிக் (51) என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு துறையினர் திடீர் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் இந்து முன்னணி பிரமுகரான இவர் கடந்த பிப்ரவரி மாதம் 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக திருவிடைமருதூர் போலீசார் 16 பேர் மீது வழக்கு பதிவு செய்து. 11 பேரை கைது செய்திருந்தனர்.
இதற்கிடையில் இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 14ம் தேதி தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்.ஐ.ஏ) மாற்றப்பட்டது. இதனிடையே நெல்லை மாவட்டம் தென்காசி செய்யது குருக்கள் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த அகமது சாலிக் (51) என்பவரை தேசிய புலனாய்வு துறையினர் கடந்த மாதம் 27ம் தேதி கைது செய்தனர்.
இந்நிலையில் இன்று காலை தென்காசியில் உள்ள அவரது வீட்டில் தேசிய புலனாய்வுத் துறையினர் திடீர் சோதனை நடத்தினர். 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த சோதனையின் போது என்னென்ன கிடைத்தது என்பது குறித்த தகவலை வெளியிட அதிகாரிகள் மறுத்துவிட்டனர். சோதனை நடந்த தெரு பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
அதிக அளவு போலீசார் குவிக்கப்பட்டு இருந்தாலும் அந்த பகுதியில் மக்கள் நடமாட்டத்தை தடை செய்தாலும் அப்பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.