
ஜனவரியில் கட்சி தொடங்குவதாக நடிகர் ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.
நடிகர் ரஜினிகாந்த் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு. மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம். இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல. வரப்போகிற சட்டமன்ற தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்... அதிசயம்... நிகழும்!!!" என தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தியிருந்த நிலையில், காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் நேற்று சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார். இந்த நிலையில் அரசியல் கட்சித் தொடங்குவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.