
பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு 43% ஆக உயர்வு: தெலுங்கானாவில் நடந்தது சமூகநீதிப் புரட்சி- தூங்குவது போல் நடிக்கும் தமிழக அரசு விழிப்பது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தெலுங்கானாவில் அண்மையில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு 29 விழுக்காட்டில் இருந்து 42 விழுக்காடாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதேபோல் பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீட்டை 15% ஆகவும், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை 10% ஆக உயர்த்தி அம்மாநில சட்டப்பேரவையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. தெலுங்கானா அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
சட்டப்பேரவைத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தெலுங்கானாவில் சமூக, பொருளாதார, கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல், சாதி கணக்கெடுப்பை நடத்திய அம்மாநில காங்கிரஸ் அரசு, அதனடிப்படையில் கல்வி, வேலைவாய்ப்பு, உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்து சட்டம் இயற்றியுள்ளது. அடுத்தக்கட்டமாக பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை மூன்றாக பிரித்து உள் இட ஒதுக்கீடு வழங்கவும் தெலுங்கானா அரசு திட்டமிட்டுள்ளது.
தெலுங்கானாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டதும், அதனடிப்படையில் இட ஒதுக்கீடு உயர்த்தப்பட்டிருப்பதும் உண்மையாகவே சமூகநீதிப் புரட்சி தான். தெலுங்கானா அரசு இயற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள சட்டங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்ட பிறகு இந்த இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும். அதுவும் சாத்தியமானால் அது வரலாற்று சிறப்பாக அமையும்.
தமிழ்நாட்டிலும் ஓர் அரசு இருக்கிறது. சமூகநீதியைக் காப்பதற்காகவே அவதாரம் எடுத்து வந்ததாக அடிக்கடிக் கூறிக் கொள்ளும்; அதற்கான விளம்பரங்களை வெளியிடும். ஆனால், சமூகநீதிக்காக ஒரு சிறு துரும்பைக் கூட அந்த அரசு கிள்ளிப்போடாது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினால் அதற்கான அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று கைகளை விரிக்கும். தமிழக ஆட்சியாளர்களுக்குத் தெரிந்த சமூகநீதி இது தான்.
எந்த மாநிலத்திலும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தலாம்; அதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் பலமுறை கூறியுள்ளன. பிகாரிலும், தெலுங்கானாவிலும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதனடிப்படையில் இட ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கான சட்டமும் இயற்றப்பட்டுள்ளது. இவையெல்லாம் தமிழக அரசுக்கும் தெரியும்; சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தும் அதிகாரம் தங்களுக்கு இருப்பதையும் தமிழக ஆட்சியாளர்கள் அறிவார்கள். ஆனாலும், அவர்கள் அதை செய்ய மாட்டார்கள். காரணம்... அவர்கள் தூங்கவில்லை, தூங்குவதைப் போல நடிக்கிறார்கள்.
சிலரை சில காலம் ஏமாற்றலாம், பலரை பல காலம் ஏமாற்றலாம். ஆனால், எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது. இதை தமிழ்நாடு அரசு உணர வேண்டும். தமிழ்நாட்டிலும் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தி சமூகநீதியைக் காக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழக ஆட்சியாளர்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.