Skip to main content

நெகிழியும், நெரிசலும் இல்லா தமிழகம் அமையும் நாளே மகிழ்வான பொன்னாள்! ராமதாஸ்

Published on 05/01/2019 | Edited on 05/01/2019
road




பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

 

தமிழ்நாட்டில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கி வீசக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப் பட்ட தடை முழு அளவில் நடைமுறைக்கு வந்திருக்கிறது. இதற்கு மக்களும் முழுமையான ஆதரவு அளித்து, பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை கைவிட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

 

மக்களுக்கு எல்லையில்லா நன்மைகளைத் தரும் இயற்கைக்கும், சுற்றுச்சூழலுக்கும் நெகிழிப் (பிளாஸ்டிக்) பொருட்களை விட மோசமான எதிரி இருக்க முடியாது. சோலைவனங்களையும் பாலைவனங்களாக மாற்றும் வலிமை நெகிழிகளுக்கு உண்டு. மக்கும் தன்மையற்ற நெகிழிகள் மண்ணில் புதைவதால் அதன் தன்மையை மாற்றுவதுடன், மழை நீர் பூமிக்குள் இறங்காமல் தடுக்கிறது. நெகிழிக் குப்பைகளை  உட்கொள்வதால் மாடுகள், நாய்கள் உள்ளிட்ட விலங்கினங்கள் மூச்சுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கின்றன. சூடான உணவுகளை நெகிழிப்பைகளில் அடைக்கும் போது உருவாகும் வேதிவினை காரணமாக, அந்த உணவை உட்கொள்வோருக்கு புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.

 

அதனால் தான் நெகிழியை மனிதகுலத்தின் எதிரி என்று நான் தொடர்ந்து விமர்சித்து வருகிறேன். நெகிழி இல்லாத தமிழகத்தை உருவாக்குவதே எனது முதன்மைக் கனவு ஆகும்.  நெகிழிப் பொருட்களை தடை செய்ய வேண்டும் என்று பசுமைத் தாயகம் அமைப்பு உருவாக்கப்பட்ட நாளில் இருந்து வலியுறுத்தி வருகிறேன். 2002&ஆம் ஆண்டு ஜூலை 25&ஆம் தேதி பசுமைத்தாயகம் நாளையொட்டி சென்னையில் நெகிழி எதிர்ப்பு பரப்புரையை மேற்கொண்டேன். நெகிழியின் தீமைகள் குறித்து மக்களிடம் விழிப்பை ஏற்படுத்துவதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரட்டி வரப்பட்ட நெகிழிக் குப்பைகளை சென்னையில் ஓரிடத்தில் கொட்டி, பாதுகாப்பாக அகற்றினோம். 2002 மற்றும் 2012&ஆம் ஆண்டுகளில் பசுமைத் தாயகம் நாளையொட்டி சென்னை தியாகராயர் நகரில் கடை,கடையாக ஏறி நெகிழி எதிர்ப்பு துண்டறிக்கைகளை வழங்கி வணிகர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினேன். கடந்த 20 ஆண்டுகளாக நெகிழிப் பொருட்களுக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்துள்ளது.

 

2015&ஆம் ஆண்டு ஜூன் 5 உலகச் சுற்றுச்சூழல் நாளில் நெகிழிப் பொருட்களுக்கு தடை விதிக்க வலியுறுத்தி பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பரப்புரை நடத்தப் பட்டது. அதன்பின் 3 ஆண்டுகள் கழித்து 2018&ஆம் ஆண்டு ஜூன் 5 உலகச் சுற்றுச்சூழல் நாளில் நெகிழிப் பொருட்களுக்கு தமிழ்க அரசு தடை விதித்தது. அந்தத் தடை புத்தாண்டு முதல் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், அனைத்துத் தரப்பினரும் அதற்கு ஒத்துழைப்பு அளிப்பது ஆனந்தமளிக்கிறது.  நெகிழிப் பைகளை பயன்படுத்திப் பழகிப் போன மக்களுக்கு இது தொடக்கத்தில் சற்று சிரமத்தைக் கொடுத்தாலும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக இதை மகிழ்ச்சியுடன் மக்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.



 

Ramadoss




தமிழகத்தில் ஒருமுறை பயன்பாட்டு நெகிழிப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது மக்களிடம்  வரவேற்பைப் பெற்றுள்ள போதிலும், பன்னாட்டு நிறுவனங்கள் உற்பத்திச் செய்யும் பொருட்கள் இன்னும் நெகிழி உறைகளில் அடைத்து விற்கப்படுவது சற்று கவலையளிக்கிறது. இதையும் மாற்றி தமிழகத்தில் நெகிழிக்கு முழுமையான தடை விதிக்கப்படும் நாளே எனது கனவு நிறைவேறும் நாளாக இருக்கும்.

 

அதேபோல், சென்னையில் அனைத்து வகையான போக்குவரத்து முறைகளையும் ஒருங்கிணைத்து, சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப்  போக்குவரத்துக் குழுமச்  சட்டம்  மற்றும் அதற்கான  விதிகள், வரும் 16 ஆம் தேதி அறிவிக்கை  செய்யப்படும்  என்று ஆளுனர் உரையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுவும் பாட்டாளி மக்கள் கட்சியின் கனவுத் திட்டம் தான். 2008&ஆம் ஆண்டு ஏப்ரல் 14&ஆம் தேதி  நான் வெளியிட்ட,‘‘சென்னை பெருநகருக்கான மாற்றுப் போக்குவரத்துத் திட்டம்’’ என்ற தலைப்பிலான ஆவணத்தில் சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த பேருந்துகள், தொடர்வண்டிகள், பெருநகரத் தொடர்வண்டிகள், பறக்கும் தொடர்வண்டிகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்தும், நடைபாதை மற்றும் மிதிவண்டி போக்குவரத்தை மேம்படுத்தியும் ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் குழுமத்தை அமைக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியிருந்தது. அத்திட்டத்திற்கு தான் பேரவையில் ஆளுனர் உரை அறிவிப்புகள் மூலம் தமிழக அரசு செயல்வடிவம் கொடுத்திருக்கிறது.


 
இந்தத் திட்டத்தையும், அதிவிரைவுப் பேருந்துப் பாதை திட்டம் (Bus Rapid Transit System - BRTS),   சென்னை மாநகர நீர்வழிப் பாதைகளை மேம்படுத்தியும், கடல்வழிப் பாதைகள் வழியாகவும் நீர்வழிப் போக்குவரத்தை தொடங்குதல் உள்ளிட்ட திட்டங்களையும் தேர்தல் அறிக்கைகளில் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்தத் திட்டங்களும் செயல்வடிவம் பெறும் போது சென்னை போக்குவரத்து நெரிசல் இல்லாத நகரமாக மாறும். நெகிழிக் குப்பைகளும், போக்குவரத்து நெரிசலும் இல்லாத சென்னை மாநகரம் உருவாகும் நாளே என் இருபதாண்டு கனவு நிறைவேறும் நாளாக அமையும். இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வகுப்புக்கு ஓர் ஆசிரியரை உறுதி செய்ய வேண்டும்'-ராமதாஸ் கோரிக்கை

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 'One teacher should be confirmed for the class' - Ramadoss' demand

'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்துவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் ஓராசிரியர் பள்ளிகள் இருக்கும் நிலையில், அதை சரி செய்யாமல் ஆசிரியர்கள் மாணவர்கள் விகிதத்தை செயற்கையாக குறைத்துக் காட்டி, இருக்கும் ஆசிரியர்களையும் வேறு பள்ளிகளுக்கு மாற்றுவது  ஏற்கனவே நலிவடைந்த நிலையில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்துவதற்கே வழி வகுக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் தொடக்கப்பள்ளிகளில் 1:19 என்ற அளவிலும், நடுநிலைப் பள்ளிகளில் 1:21, உயர்நிலைப் பள்ளிகளில் 1:22, மேல்நிலைப் பள்ளிகளில் 1:30 என்ற அளவிலும் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இந்த புள்ளிவிவரங்களைப் பார்த்தால் தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக இருப்பதாகத் தோன்றும். ஆனால், இவை அனைத்தும் மிகைப்படுத்தப்பட்ட, திரிக்கப்பட்ட, உண்மைக்கு மாறான புள்ளிவிவரங்கள் ஆகும். அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு இது எந்த வகையிலும் உதவாது.

தொடக்கப்பள்ளிகளில் 19 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் இருந்தால் அது அரசு -பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெருமளவில் பங்களிக்கும். ஆனால், உண்மை நிலை அதுவல்ல. ஆசிரியர்கள், மாணவர்கள் விகிதம் வகுப்பறை அளவில் கணக்கிடப்பட வேண்டும். அதாவது, ஆசிரியர், மாணவர்  விகிதம் 1:20 என்றால், ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் வரை இருந்தால் ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். அதற்கும் கூடுதலாக இருந்தால் அந்த வகுப்பு இரண்டாக பிரித்து இரு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மாநில அளவில் தான் இந்த விகிதம்  கணக்கிடப்படுகிறது. தொடக்கப்பள்ளிகளின் ஆசிரியர், மாணவர் விகிதம் 1:19 என்றால், தமிழ்நாட்டில்  தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 10,000 பேர் இருந்தால், 1.90 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். இது சரியல்ல. இத்தகைய ஆசிரியர், மாணவர்கள் விகிதத்தில் தரமான கல்வியை வழங்குவது சாத்தியமல்ல.

தமிழக அரசு வகுத்துள்ள ஆசிரியர், மாணவர் விகிதத்தின்படி, ஒரு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் தலா 7 மாணவர்கள் இருப்பதாக வைத்துக் கொண்டால், அந்தப் பள்ளிக்கு இரு ஆசிரியர்கள் மட்டுமே வழங்கப்படுவார்கள். மூன்றாவது  ஆசிரியரோ, நான்காவது ஆசிரியரோ இருந்தால் அவர்கள் உபரியாக கருதி வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுவர்.

ஒரு வகுப்பில் ஒரு மாணவர் இருந்தாலும், அவருக்கு கற்பிக்க ஓர் ஆசிரியர் இருக்க வேண்டும் என்பது தான் இயற்கை விதியாகும். ஆனால், ஐந்து வகுப்புகளில் 19 மாணவர்கள் இருந்தால் ஒரே ஒரு ஆசிரியரும், 38 அல்லது அதற்கும் குறைவான மாணவர்கள் இருந்தால் இரு ஆசிரியரும் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்பது என்ன நியாயம்? 5 வகுப்புகளை ஓர் ஆசிரியரோ அல்லது இரு ஆசிரியர்களோ கவனித்துக் கொள்ள வேண்டும் என்றால் அவர்களால் மாணவர்களுக்கு எவ்வாறு கற்பிக்க முடியும்?

தமிழக அரசின் தொடக்கக் கல்வித்துறை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி  தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 22,831 தொடக்கப் பள்ளிகள், 6587 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 29,418 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 69,640 மட்டும் தான். இந்த பள்ளிகளில் வகுப்புக்கு ஒரே ஒரு பிரிவு என்று வைத்துக் கொண்டால் கூட  மொத்தம் 1,66,851 வகுப்புகள் இருக்கக்கூடும். அதன்படி பார்த்தால் 97,211 வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. இதுவும் கூட இரு ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரம் தான். இப்போது ஆசிரியர் இல்லாத வகுப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் கூடுதலாக இருக்கும். உண்மை நிலை இவ்வாறு இருக்க 2236 ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக கூறுவது கேலிக்கூத்து.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகளை கட்டுவதற்காக ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இரு ஆண்டுகள் ஆகியும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் புதிய வகுப்பறைகள் கட்டப்படவில்லை.

அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உண்மையாகவே தமிழக அரசுக்கு இருக்குமானால், அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை உடனடியாக வலுப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக பொய்க்கணக்கு காட்டுவதை விடுத்து வகுப்புக்கு குறைந்தது ஓர் ஆசிரியரை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.

Next Story

ஒரே நாளில் குவிந்த கூட்டம்; உதகையில் போக்குவரத்து நெரிசல்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Crowds gathered in one day; Traffic jam in the ooty

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்ச்சத்து குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும் படி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலாத் தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் மலைப் பிரதேசமான உதகைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர்.கடந்த இரண்டு நாட்களாகவே சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், தற்போது இன்று அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் உதகையில் குவிந்துள்ளனர். இதனால் உதகையில் நகர்ப் பகுதியில் சுற்றுலா வாகனங்கள் அணிவகுத்ததால் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

பல்வேறு இடங்களில் ஒரு வழிச்சாலையாக நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சாலைகள் மாற்றப்பட்டாலும் போக்குவரத்து நெரிசல் என்பது அதிகரித்து வருகிறது. உதகை தாவரவியல் பூங்கா சாலை, தொட்டபெட்டா சாலை, கூடலூர் சாலை, பேருந்து நிலையம் செல்வதற்கான சாலை என அனைத்து சாலைகளிலும் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும் சுற்றுலா பயணிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.