Skip to main content

உழவர்கள் ஊதியக்குழுவை மத்திய, மாநில அரசுகள் அமைக்க வேண்டும் - ராமதாஸ்

Published on 14/02/2019 | Edited on 14/02/2019
r

 

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை :   ‘’இந்தியாவில் வேளாண் தொழிலாளர்களின் ஊதியம் குறித்து பன்னாட்டு தொழிலாளர்கள் அமைப்பு  வெளியிட்டுள்ள அறிக்கையில் இடம்பெற்றுள்ள புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியளிப்பவையாக உள்ளன. உலகுக்கே உணவு படைக்கும் உழவுத் தொழிலாளர்கள் பட்டினியின்றி வாழ முடியாத நிலையில் தான்  வாடுகின்றனர் என்றால் அதற்கு நாட்டை ஆண்டோரும், ஆள்வோரும் தான் பொறுப்பேற்க வேண்டும்.

 

பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள, ‘இந்திய ஊதிய அறிக்கை’ என்ற தலைப்பிலான அறிக்கையில், திறன் பயிற்சி பெற்ற உழவுத் தொழிலாளர்களுக்கான ஊதியம் 1993-94 முதல் 2011-12 வரையிலான 18 ஆண்டுகளில் 48% மட்டும் தான் அதிகரித்திருக்கிறது என்று கூறப்பட்டிருக்கிறது. 1993-94 ஆம் ஆண்டில் உழவுத் தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.120 வழங்கப்பட்டது. அதன்பின் 18 ஆண்டுகள் கழித்து அவர்களின் ஊதியம் ரூ.177 ஆக மட்டுமே உயர்ந்துள்ளது. அதாவது உழவுத் தொழிலாளர்கள் 18 ஆண்டுகளில் பெற்ற ஊதிய உயர்வு ரூ.57 மட்டும் தான். இது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத ஒன்றாகும்; உழவுத் தொழிலாளர்களுக்கு எதிரான பொருளாதார துரோகமாகும்.

 

அதேநேரத்தில், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயரதிகாரிகள், மேலாளர்கள் ஆகியோரின் ஊதியம் இதே காலத்தில் 90% உயர்ந்திருக்கிறது. 1993-94 ஆம் ஆண்டில் ரூ. 530 ஆக இருந்த  அவர்களின் ஒரு நாள் ஊதியம் ரூ.1052 ஆக அதிகரித்துள்ளது. தொழில்பிரிவினரின் ஊதியமும் இதே காலத்தில், இதே அளவு அதிகரித்துள்ளதாக பன்னாட்டு தொழிலாளர்கள் அமைப்பு கூறியுள்ளது.

 

உழவுத் தொழிலாளர்கள் எந்த அளவுக்கு சுரண்டப்படுகின்றனர் என்பதற்கு இந்த புள்ளிவிவரங்கள் தான் உதாரணம் ஆகும். இத்தகைய ஊதியச் சுரண்டல்கள் காரணமாக உழவுத் தொழிலாளர்கள் இரு வழிகளில் பாதிக்கப்படுகின்றனர். முதலாவதாக,  விலைவாசிக்கு இணையான அளவில் வேளாண் தொழிலாளர்களின் ஊதியம் உயர்த்தப்படாததால், அவர்களின் வறுமை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இது அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மட்டுமின்றி குழந்தைகளின் கல்வியையும்  பாதிக்கிறது. இதனால் அவர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது எட்டாக்கனியாகவே உள்ளது.

 

இரண்டாவதாக,  இந்தக் கணக்கெடுப்புக் காலத்தின் தொடக்கத்தில், அதாவது 1993-94 ஆம் ஆண்டில்,  அதிக ஊதியம் பெற்ற சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், உழவுத் தொழிலாளர்களுக்கும் இடையிலான ஊதிய வேறுபாடு 4.41 மடங்கு தான். ஆனால், கணக்கெடுப்பு காலத்தில் இறுதியில் இந்த வேறுபாடு 5.94 மடங்கு ஆகும். அதாவது ஊதிய விகித வேறுபாட்டின் மடங்கு அதிகரிப்பதால்  உயர்வருவாய் பிரிவினருக்கு கிடைக்கும் கூடுதல் வருமானம் என்பது வேளாண் தொழிலாளர்களின் ஒட்டுமொத்த ஊதியத்தை விட அதிகம் ஆகும். இதை இன்னும் எளிமையாகக் கூற வேண்டுமானால்,  பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்கள் ஆகின்றனர்... ஏழைகள் மேலும் மேலும் ஏழைகளாகின்றனர். இவை அனைத்தும் புதிய பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்பட்ட தீமைகளாகும்.

 

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் 2004-05 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது தான் உழவுத் தொழிலாளர்களின் வாழ்வை ஓரளவாவது வளப்படுத்தியுள்ளது. 1993-94 முதல் 2004-05 ஆம் ஆண்டு வரையிலான 11 ஆண்டுகளில் உழவுத் தொழிலாளர்களுக்கு கிடைத்த  ஊதிய உயர்வு  வெறும் 8 ரூபாய் மட்டும் தான். அதாவது அந்தக் காலத்தில் அவர்களின் ஊதியம் ஆண்டுக்கு ஒரு ரூபாய் கூட உயரவில்லை; வெறும் 73 காசுகள் மட்டும் தான் உயர்ந்துள்ளன.  2004-05 ஆம் ஆண்டில் வேலை உறுதித் திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர்  வந்த 7 ஆண்டுகளில் அவர்களின் ஊதியம் ரூ.49, அதாவது ஆண்டுக்கு ரூ.7 வீதம் அதிகரித்துள்ளது. வேலை உறுதித் திட்டத்தால் உழவுத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு விகிதம் சுமார் 10 மடங்கு அதிகரித்துள்ளது.

 

உழவுத் தொழிலாளர்களாக பணியாற்றுவோரில் 99% நிலமற்ற ஏழைகள் ஆவர். அரசு ஊழியர்கள் மற்றும் அமைப்பு சார்ந்த பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு உத்தரவாதப் படுத்தப்பட்டுள்ள நிலையில், உழவுத் தொழிலாளர்களுக்கு மட்டும்  எந்தவிதமான சமூகப்பாதுகாப்பும் கிடையாது. இதைக் கருத்தில் கொண்டு தான் 2009-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ஆம் தேதி பா.ம.க. சார்பில் நான் வெளியிட்ட தமிழ்நாட்டின் உழவர்களுக்கான ஒரு கொள்கையறிக்கை என்ற தலைப்பிலான ஆவணத்தில், உழவர்கள் மற்றும் உழவுத் தொழிலாளர்களுக்கு நிலையான வருமானத்தை உறுதி செய்யவும், அவர்களுக்கு ஊதிய உயர்வை உறுதி செய்யவும் உழவர்கள் ஊதியக்குழுவை அமைக்கும்படி வலியுறுத்தப் பட்டிருந்தது.

 

அண்மையில் மத்திய அரசு அறிவித்த உழவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கும் திட்டத்தின்படி  நிலம் வைத்துள்ள உழவர்கள் மட்டும் தான் பயனடைவர். உழவுத் தொழிலாளர்களுக்கு எந்த பயனும் கிடைக்காது. அதனால் உழவுத் தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியமும், முறையான ஊதிய உயர்வும் கிடைப்பதை உறுதி செய்ய உழவர்கள் ஊதியக்குழுவை மத்திய, மாநில அரசுகள் அமைக்க வேண்டும்.’’

 

சார்ந்த செய்திகள்