ராமேஸ்வரத்தில் மாற்றுப் பாதையில் சென்ற ராம ராஜ்ய ரதம் காவல்துறையினரால் தடுத்து நுறுத்தப்பட்டது.
நேற்று மதுரையில் இருந்து தொடங்கிய இந்த ரத யாத்திரை, நேற்று இரவு ராமேஸ்வரம் சென்றடைந்தது. ராமேஸ்வரத்தை தொடர்ந்து இன்று காலை தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த ரத யாத்திரை மாற்றுப்பாதையில், அதாவது போலீசார் கூறிய ஈசிஆர் சாலையில் செல்லாமல் தேவிப்பட்டனம் சாலையில் சென்றதால் அதனை காவலர்கள் தடுத்து நிறுத்தினர்.
முன்னதாக திட்டமிட்ட பகுதியில் பதட்டமான பகுதி என அந்த வழியில் ரத யாத்திரையை அனுமதிக்காமல் மாற்று வழிப்பாதையில் செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் இதனை ரதத்தில் வரும் சாமியார் ஏற்க மறுத்து, நாங்கள் திட்டமிட்ட பாதையில் தான் செல்வோம் என அதே பாதையில் சென்றுள்ளனர். இதையடுத்து ராம ராஜ்ய ரத யாத்திரை போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது.
இதனால் காவலர்களுக்கும், பாஜகவினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதமானது இருதரப்பினருக்கிடையே 10 நிமிடத்திற்கும் மேலாக நீடித்தது. இதனைத்தொடர்ந்து காவலர்கள் ஒருவழியாக அவர்களை சமாதானப்படுத்தினர். அதன்பின், போலீசாரால் நிறுத்தப்பட்ட ரத யாத்திரை தொடர்ந்து மாற்றுப்பாதையில் புறப்பட்டு சென்றது.