சமீபத்தில் நடிகர் ஜெயம்ரவி நடித்து வெளிவரவுள்ள, கோமாளி என்கிற படத்தில் ரஜினி அரசியல் குறித்து ஒரு விமர்சனம் புரோமாவில் வெளியாகியுள்ளது. இதனைப்பார்த்து ரஜினியின் மக்கள் மன்றத்தினர் கொதித்துப்போய்வுள்ளனர். இதற்கு நடிகர் கமலும் தனது அதிருப்தியை தயாரிப்பாளரிடம் சொன்னதாக கூறப்படுகிறது. ரஜினியை சந்தித்து தங்கள் தரப்பை விளக்க படக்குழு முயற்சித்து வரும் நிலையில், இந்த படத்துக்கு எதிராக கோபத்தில் உள்ளனர் ரஜினி ரசிகர்களும், நிர்வாகிகளும்.
இந்நிலையில், மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் இணையதள அணி கூடி விவாதித்துள்ளது.
ரஜினியின் மக்கள் மன்றத்தின் சார்பில் முகநூலில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சோல்ஜர்ஸ் என்கிற பெயரில் ஒருப்பக்கம் உள்ளது. இந்த பக்கத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இணைந்துள்ளனர். வேலூர் ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் செயல்படும் இந்த பக்கத்தை ரஜினி மன்ற மா.செ சோளிங்கர் ரவியால் உருவாக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட இணையதள அணிதான் நிர்வகிக்கிறது.
முகநூல், டுவிட்டர், வாட்ஸ்அப் பில் இந்த அணிதான் ரஜினி மீதான விமர்சனங்களுக்கு பதிலடி தந்துவருகிறது.15 பேர் கொண்ட இந்த அணி ரஜினியை இணையத்தில் புரமோட் செய்யும் வேலைகளையும் செய்து வருகிறது. ரஜினி மன்றத்தின் செயல்பாடுகள், ரஜினி பற்றிய அறிக்கைகள், அவர் பேசும் பேச்சுக்கள் போன்றவற்றை சமூக வளைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறது இந்த குழு.
இந்த குழுவிற்கு வேலூர் ரஜினி மக்கள் மன்றத்தின் மா.செ சோளிங்கர் ரவி தலைமையில் ஆலோசனை கூட்டம், கடந்த ஆகஸ்ட் 7ந்தேதி சோளிங்கரில் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட குழு நிர்வாகிகளிடம் பேசிய ரவி, ரஜினி பற்றிய தகவல்கள் பல பொய்யாக வெளிவருகின்றன. அதனை பொய் என எடுத்துச்சொல்ல வேண்டும், அதேபோல், ரஜினியின் அரசியல் நிலை குறித்து பல விமர்சனங்கள் இணையத்தில் வருகின்றன. அதற்கு சரியான கருத்தில், வரம்பு மீறிய வார்த்தைகளை பயன்படுத்தாமல் பதிலளிக்க வேண்டும், அதேபோல் நம் செயல்பாடுகளை பார்த்து இளைஞர்கள் நம் மன்றத்தில் வந்து சேரும் வகையில் பணியாற்ற வேண்டும் எனக்கூறி அனுப்பியுள்ளார்.
அதோடு, கோமாளி படத்தில் ரஜினியை கிண்டல் செய்து வருவதை போன்ற காட்சி பற்றியும் விவாதித்துள்ளனர். ரசிகர்கள் என்கிற முறையில் நாம் நம் கண்டனத்தை தெரிவிப்போம். இந்த விவகாரம் அவரின் கவனத்துக்கு சென்றுள்ளது. ரஜினி என்ன சொல்கிறாறோ அதற்கு ஏற்றாற்போல் செயல்படுவோம். அதுவரை நியாயமான முறையில் நம் எதிர்ப்பை பதிவு செய்வோம் என முடிவு செய்துள்ளார்களாம்.