Skip to main content

ரயில் மறியல்,முன்னாள் எம்.எல்.ஏ. கைது!

Published on 12/10/2019 | Edited on 12/10/2019

திண்டுக்கல்லில் ரயில் மறியலில் ஈடுபட்ட முன்னாள் எம்எல்ஏ தோழர் பால பாரதி உள்பட 30 பேரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் சிலுவத்தூர் சாலையில் உள்ள பழனி, கரூர், சென்னை மார்க்கமாக செல்லும் மூன்று ரயில்வே கேட்டுகள் உள்ளன.
 

rail strike



ரயில்கள் வரும் சமயங்களில் இந்த மூன்று கேட்டுகள் மூடப்படுவதால் பாலகிருஷ்ணாபுரம் சிலுவத்தூர் செங்குறிச்சி, பாறைப்பட்டி, மலைக்கேணி, செந்துரை உள்பட 50க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டு வந்தது. அதுபோல் பாலகிருஷ்ணாபுரம் பகுதிகளும் பெரும்பாலான மக்கள் குடியேறியுள்ளனர். இந்த நிலையில் தான் ரயில்வே கேட்டுகள் மூடுவதால் காலையில் வேலைக்கு செல்பவர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு செல்லும்போது கடும் சிரமப்பட்டு வந்தனர்.

எனவே மூன்று ரயில்வே கேட்டுகளையும் கடக்கும் விதமாக மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் இந்த பணிகள் ஆமை வேகத்தில் நடந்து 50 சதவீத பணிகள் கூட முடியவில்லை. மேலும் பாலம் கட்டுவதற்காக கையாளப்பட்டுள்ள நிலத்தின் உரிமையாளர்கள் பலர் இழப்பீடு தொகை பெறமுடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

பஸ்களும் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதால் பாலகிருஷ்ணனபுரம் பகுதி திண்டுக்கல்லில் இருந்து துண்டிக்கப்பட்டு உள்ளது மேலும் இப்பகுதியில் குடியிருப்பவர்கள் அவசர காலங்களில் செல்லமுடியவில்லை. ஆம்புலன்ஸ் உள்பட வாகனங்கள் சென்று வர சிரமமாக உள்ளதால் கடந்த 5 வருடங்களில் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன.

இப்படி ஆமை வேகத்தில் நடந்து வரும் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், பொதுமக்களின் சிரமத்தை தவிர்த்திட கட்டி முடிக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதை உடனே திறக்க வேண்டும். மேம்பால பணிக்காக கையகப்படுத்திய நிலையில் உள்ள நிலங்களுக்கு உடனடியாக இழப்பீடு தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அனைத்து நல சங்கங்கள் அப்பகுதி பொதுமக்கள் சார்பாக ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
 

rail strike



இந்த போராட்டத்திற்கு முன்னாள் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் தோழர் பாலபாரதி தலைமையில் நடந்தது அப்பொழுது திண்டுக்கலில் இருந்து மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரயிலை மறித்து  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சில அடி தூரம் முன்னாக முன்னதாக ரயில் நிறுத்தப்பட்டது. அதைக்கண்டு ரயில்வே போலீசார் மற்றும் திண்டுக்கல் ஆர் டி உஷா உள்பட சில அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து முன்னாள் எம்எல்ஏ பாலபாரதியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்படி இருந்தும் அதற்கு உடன்பாடு ஏற்படாததால் பாலபாரதி உள்பட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதுபற்றி முன்னாலள் எம்.எல்.ஏ.தோழர் பாலபாரதி பத்திரிகையாளரிடம் பேசும்போது "நீண்டகாலமாக நடந்துவரும் மேம்பால பணிகளால் அப்பகுதி மக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் சிலரை காவல்துறையினரை வைத்து மிரட்டுகின்றனர். தற்காலிகமாக பழனி ரயில்வே கேட்டை திறந்து விட வேண்டும், சுரங்கப்பாதை பணிகளை முடிக்க வேண்டும், மேலும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இது தொடர்பாக ஏற்கனவே கலெக்டர் அலுவலகத்தில்  உண்ணாவிரதம் உள்பட பல போராட்டங்களை  நடத்தி இருக்கிறோம் அப்படியிருந்தும்  இந்த பணிகளை முடிக்காமல்  இந்த அரசு  தொடர்ந்து மெத்தனம் காட்டி வருகிறது.  இந்த நிலை தொடர்ந்து நீடித்தால்  மாவட்ட அளவில் போராட்டம் வெடிக்கும் என்று கூறினார். 
 

சார்ந்த செய்திகள்