கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து தமிழகத்திற்கு எளிதில் தீ பற்றக்கூடிய திரவமான ஸ்பிரிட்டை ஏற்றிகொண்டு டேங்கர் லாரி ஒன்று ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்துள்ளது. அப்போது இந்த டேங்கர் லாரி கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள மேலுமலை கணவாய் என்ற இடத்தில் வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி சாலையோரம் கவிழ்ந்தது.
இதனையடுத்து டேங்கர் லாரி திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தீ விபத்து காரணமாக கிருஷ்ணகிரி - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிருஷ்ணகிரி மற்றும் சூளகிரி தீயணைப்புத் துறையினர், டேங்கர் லாரியில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அதே சமயம் விபத்திற்கு உள்ளான லாரியில் இருந்த ஸ்பிரிட் மளமளவென எரிந்ததில் ஓட்டுநர் உடல் கருகி உயிரிழந்தார். மேலும் லாரியில் இருந்த கிளீனர் பலத்த காயங்களுடன் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து சம்பவம் குறித்து குருப்பரப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.