தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த ஜனவரி மாதம் 16 தேதி (16.01.2024) திருவள்ளுவர் காவி உடை அணிந்தபடி இருக்கும் புகைப்படத்தை எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு திருவள்ளுவர் தினத்துக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். அதில், “திருவள்ளுவர் தினத்தில், ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும் புலவரும், சிறந்த தத்துவ ஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன்.
அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனித குலத்துக்கு வழிகாட்டியாகவும் உத்வேகத்தின் ஆதாரமாகவும் நீடிக்கிறது. இந்த புனிதமான நாளில் அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தமிழக ஆளுநர் மாளிகை சார்பில் நாளை (24.05.2024) மாலை 5 மணிக்கு திருவள்ளுவர் திருநாள் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அச்சிடப்பட்ட திருவள்ளுவர் திருநாள் விழா அழைப்பிதழ் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதன் முகப்பு பக்கத்தில் காவி உடையில் திருவள்ளுவர் உள்ளது போன்று அச்சிடப்பட்டுள்ளது. ஆளுநரின் செயலாளர் கிர்லோஷ்குமார் பெயரில் இந்த அழைப்பிதல் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. காவி உடையுடன் கூடிய திருவள்ளுவர் படத்தை வெளியிட்டதை கண்டித்து தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளன எனத் தகவல் வெளியாகியுள்ளது. திருவள்ளுவர் திருநாள் விழா எனக் காவி உடையில் திருவள்ளுவர் படத்துடன் ஆளுநர் மாளிகை வெளியிட்ட அழைப்பிதழல் மக்கள் மத்தியில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.