தமிழகத்தில் 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டில் அரசுப் பள்ளிகளில் பயின்ற கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைத்தாலும் அத்தனை மாணவர்களில் பெரும்பான்மையான மாணவர்கள் கல்லூரி செல்ல வசதியில்லாமல் முடங்கியிருக்கின்றனர். கடன் வாங்கியாவது தங்கள் குழந்தையைப் படிக்க வைக்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் வீடு வீடாக ஏறி இறங்கி வட்டிக்குக் கடன் வாங்கும் தாய், தந்தைகளை நினைக்கும் போதே கண்கள் பனிக்கின்றன.
அப்படி ஒரு மாணவர் தான் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம், திருநாளூர் வடக்கு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன். உடல் நலமில்லாத தந்தை. தினக்கூலி வேலை செய்யும் தாயின் வருமானம் குடும்ப உறுப்பினர்களுக்கான உணவுக்கே சரியாகிறது. பொறியியல் படிக்கும் அண்ணன், முதுகலை பட்டம் படித்துள்ள அக்கா, இவர்களுக்கு வாங்கிய கடனையும் வட்டியையுமே கட்ட முடியாத நிலையில் மறமடக்கி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து கடந்த ஆண்டு +2 தேர்ச்சி பெற்ற பிரபாகரன் இந்த ஆண்டு நீட் தேர்விலும் தேர்ச்சி பெற்று கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.
சேர்க்கைக்கு போகவே பணமில்லாத நிலையில் சிலரது உதவியால் சேர்க்கை முடிந்தது. அடுத்துள்ள நடைமுறை செலவுகளுக்காக பிரபாகரனின் தாய் உறவினர்கள், தெரிந்தவர்களின் வீடுகளுக்கு போய் வருகிறார். செவ்வாய்க்கிழமை கல்லூரி திறப்பு. ஆனால், கல்லூரி செல்லத் தேவையான பொருட்களைச் சேகரிக்க ஓடிக் கொண்டிருக்கிறார்கள் தாயும் மகனும்.
பிரபாகரன் நம்மிடம்.. “ரொம்ப ஏழ்மையான குடும்பம். அம்மா ஒருவரின் உழைப்பு எங்களோட உணவுத் தேவைக்கு சரியாக இருக்கும். அண்ணன், அக்கா படிப்பிற்கு வாங்கிய கடனே வட்டி, வட்டிக்கு வட்டினு ஏறிகிட்டு இருக்கு. கஜா புயலில் மரம் விழுந்து உடைந்த வீடு கூட சரிபண்ண முடியல. இப்ப நான் ஆசைப்பட்ட மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைத்தும் படிப்பை முழுமையாக முடிச்சு வெளியே வரமுடியுமா என்ற கேள்விக்குறியோட நிற்கிறேன்.
அமைச்சர் மெய்யநாதன், நான் படிச்ச பள்ளியிலிருந்தும், அணவயல் அறம் அறக்கட்டளையிலிருந்தும் கொடுத்த உதவிகளைப் பெற்று அட்மிசன் போட்டுட்டு சில உடைகள் வாங்கி இருக்கிறேன். புதுக்கோட்டை நெடுஞ்சாலைத்துறை ஏ.டி. சுந்தர்ராசு சார் பொருட்கள் வாங்கி தந்தாங்க. இது போதுமா என்றால், என்னால சொல்ல முடியல. அரசாங்கம் கல்வி, விடுதிக் கட்டணம் கட்டுவதால் ரொம்ப சிரமம் குறைந்திருக்கிறது. இதனால எனக்கு உதவிய நல்ல உள்ளங்களுக்கும், அரசுக்கும் நன்றி. இப்ப கூட கல்லூரிக்குக் கிளம்பனும். ஆனா, அம்மா யார்கிட்டயோ கடன் கேட்க போய் இருக்காங்க. என் படிப்பிற்காக யாரு உதவினாலும் காலமெல்லாம் மறக்கமாட்டேன்.” என்றார்.
மருத்துவப் படிப்பு என்பது ஒரு வருடத்தில் முடிந்துவிடாது. 5 ஆண்டுகள் வரை ஆகும் செலவினங்களை இந்த மாணவர் எப்படி சமாளிக்கப் போகிறார். இந்த ஏழை மாணவனுக்கு கொடையுள்ளம் படைத்தவர்கள் உதவினால் மட்டுமே சாத்தியமாகும் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.