தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், மாநிலத்தின் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பிவருகின்றன. இந்நிலையில், காட்பாடியில் வெள்ளத்தில் சிக்கிய தாய் நாய், அதன் குட்டிகளுடன் மீட்கப்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் பாலாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அந்த வெள்ளத்தில் தாய் நாயும், அதன் குட்டிகளும் சிக்கிக்கொண்ட அலறின. அதனைத் தூரத்திலிருந்து கண்ட மக்கள், பேரிடர் மீட்புக் குழுவினருக்குத் தெரிவித்தனர். வெள்ளத்திற்கு நடுவிலிருந்த புதர் ஒன்றில் நாயும் குட்டியும் சிக்கிக்கொண்ட நிலையில், நீரைக் கடக்க முயன்ற நாய்க்குட்டி தண்ணீரில் அடித்து சிறிது தூரம் சென்றது. இருப்பினும் அதிர்ஷ்டவசமாகச் செடிகளைப் பிடித்து மீண்டும் அதேபோன்ற புதரில் சிக்கியது. உடனடியாக உள்ளே இறங்கிய மீட்புப் படையினர், கயிற்றைப் பயன்படுத்தி தாய் நாயையும் குட்டி நாய்களையும் காப்பாற்றினர்.
இது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது. அதில், வெள்ளத்தின் தன்மை அறியாது எப்படியாவது கடந்துவிடலாம் என குட்டி நாய் நீரில் இறங்க.. அதனை வீடியோ எடுத்துக்கொண்டிருக்கும் நபர் பதற்றத்தில், ''அடடா ஆண்டவா... காப்பாத்தி விட்ரலாம்'' எனக் கூறுவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.