ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரி புதுச்சேரியில் உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி மாநிலத்தில் பணிபுரியும் அரசு நிதி உதவி பெறும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் 7 -ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பிப்ரவரி மாதம் நடைபெற்ற உயர்மட்ட பேச்சு வார்த்தையின் போது முதல்வர் நாராயணசாமி, அரசு நிதி உதவி பெறும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்படும் என்று உறுதி அளித்தார். உறுதிமொழியை அறிக்கையாகவும் வெளியிட்டார்.
மேலும் சொசைட்டி கல்லூரிகளுக்கு 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தப்படும் போது அரசு நிதி உதவி பெறும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் அமல்படுத்தப்படும் என்றும் உறுதி அளித்தார்.
இதையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தொடரில் சொசைட்டி கல்லூரிகளுக்கு மட்டும் 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு, அக்டோபர் மாதம் அரசு ஆணையும் வெளியிடப்பட்டது.
ஆனால் இன்று வரை அரசு நிதி உதவி பெறும் ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கு 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கான எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. உடனடியாக அரசு இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அரசு உதவி பெறும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்திற்கு கூட்டமைப்பு துணை தலைவர் ஆல்பர்ட் மார்ட்டின் தலைமை தாங்க, தலைவர் வைர.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டமைப்பு கவுரவத் தலைவர் சேஷாசலம் சிறப்புரையாற்றினார். இதில் ஆசிரியர்கள், ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.