Skip to main content

புதுச்சேரியில் ரேசனில் 3 மாதங்களுக்கு இலவச அரிசி வழங்க ஒப்புதல்! -உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

Published on 05/06/2020 | Edited on 05/06/2020

 

ration card - Free rice


புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மூன்று மாதங்களுக்கு அரிசி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 


பொதுமக்களுக்கு இடையூறின்றி மாதந்தோறும் இலவச அரிசி வழங்க வேண்டும் என முதலமைச்சர் நாரயணசாமி வலியுறுத்தியிருந்த நிலையில், இலவச அரிசிக்குப் பதிலாக பணமாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தும்படி அம்மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார். இந்த உத்தரவை ஏற்று,  புதுவையில் அரிசிக்குப் பதில் பணம் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டது.

மத்திய அரசின் இந்த உத்தரவை எதிர்த்து புதுவை முதல்வர் நாராயணசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயேன், அரிசிக்குப் பதில் பணம் வழங்கலாமா என்பது குறித்த பிரச்சனையில், குடியரசுத் தலைவர் அறிவுறுத்தல்படி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளதால், அதற்குப் புதுச்சேரி அரசு கட்டுப்பட வேண்டும் எனக்கூறி, துணைநிலை ஆளுநரின் உத்தரவை உறுதி செய்து, முதல்வர் நாராயணசாமியின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
 


கடந்த பிப்ரவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை எதிர்த்து, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். அந்த மனுவில், யூனியன் பிரதேச அரசின் முடிவுகளுக்கு முரணான கருத்துகளைத் தெரிவிக்கவும், குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்கவும் துணை நிலை ஆளுனருக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், சட்டபூர்வ காரணங்கள் இல்லாமல், அரசு திட்டத்துக்கு எதிரான கருத்தைத் தெரிவிக்க முடியாது.  மேலும், துணை நிலை ஆளுநரின் முடிவுகள் நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டவை ஆகும். ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கொள்கை முடிவுகளுக்குப் பதில், மாற்று திட்டத்தை அறிவிக்க துணைநிலை ஆளுநருக்கு அதிகாரமில்லை. அரிசிக்குப் பதில் பணம் கொடுக்கும் திட்டம் என்பது மத்திய அரசின் திட்டத்துக்கு விரோதமானது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கொள்கை முடிவில், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத துணைநிலை ஆளுநர் தலையிடுவது ஜனநாயக கொள்கைகளுக்கு விரோதமானது. தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நம்பி மக்கள் வாக்களித்தனர். அந்த வாக்குறுதியை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டியது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கடமையாகும்.  

தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து, இலவச அரிசி வழங்கும் திட்டத்தில் தலையிட மத்திய அரசுக்கும், துணைநிலை ஆளுநருக்கும் தடை விதித்து உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
 

http://onelink.to/nknapp


இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தரப்பில்,  ஏதேனும் திட்டம் தொடர்பாக அரசுக்கும், ஆளுநருக்கும் கருத்து வேறுபாடு இருந்தால், குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைக்க வேண்டும் எனவும், அனைத்து ஆதாரங்களையும் முறையாகப் பரிசீலித்து, மத்திய அரசு விரிவான உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என ஏற்கனவே ஒரு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், அது பின்பற்றப்படவில்லை என வாதிடப்பட்டது.

அதற்கு மத்திய அரசு அளித்த விளக்கத்தில், தற்போது கரோனா பரவல் காரணமாக மூன்று மாதங்களுக்கு அரிசி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், மனுவுக்குப் பதிலளிக்க அவகாசம் கோரியது. 

இதையடுத்து,  வழக்கு விசாரணையை ஜூலை 23-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்த நீதிபதிகள், மனுவுக்குப் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருக்கும் உத்தரவிட்டனர். 


 

சார்ந்த செய்திகள்