புதுச்சேரியில் கரோனா தடுப்பு பணிகளில் காவல்துறையினருடன் ஐ.ஆர்.பி.என் ரிசர்வ் பட்டாலியன், ஊர்க்காவல் படையினர் மற்றும் மகளிர் போலீசார் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் சுழற்சி முறையில் பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. கரோனா பாதித்த பகுதிகளில் எஸ்.பி.க்கள் தலைமையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருபுவனை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஐ.ஆர்.பி.என். எஸ்.பி. சுபாஷ் திருபுவனை காவல் நிலையத்திற்கு ரோந்து சென்றார். அப்போது அங்குப் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் ஒருவரிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாகவும், ஆபாசமான வார்த்தைகளால் கடுமையாக விமர்சித்தார் எனவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவலர் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் கூறினார். பின்னர் டி.ஜி.பி.யிடமும் புகார் கொடுத்துள்ளார். அதையடுத்து டிஜிபி பாலாஜி ஸ்ரீவஸ்தவாவின் உத்தரவின்பேரில் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் எஸ்.பி. சுபாஷ் தவறு செய்திருப்பது தெரியவந்தது.
அதையடுத்து திருபுவனை போலீசார் எஸ்.பி. சுபாஷ் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவரிடம் காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் காவலர் ஒருவரிடம் காவல் கண்காணிப்பாளர் ஒருவரே ஆபாசமாக நடந்து கொண்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.