புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் 26 ம் தேதி தொடங்கியது. நேற்று முதலமைச்சரும், நிதி அமைச்சருமான நாராயணசாமி 8,425 கோடி ரூபாய்க்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அந்த பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள்:-
61 நாட்கள் மீன் பிடி தடை கால நிதி 5500 ரூபாயில் இருந்து 6500 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. மழைக்கால நிவாரண நிதி 2500 ல் இருந்து 3000 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

சாலை விபத்தில் அடிப்படுபவர்களை காப்பாற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நபருக்கு 5000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி 1 கோடி ரூபாயில் இருந்து 2 கோடியாக உயர்வு. புதுச்சேரி மாநில திட்டக்குழுக்கு பதிலாக முதல்வரின் பொருளாதார நிர்வாக ஆலோசனை குழு அமைக்கப்படும்.
நீர் மேலாண்மை -கால் ஏக்கரில் நீர் குட்டை அமைக்க முழு மானியம் வழங்கப்படும்.
கரும்பு பருத்தி பயிரிடும் விவசாயிகளுக்கு 10,000 ரூபாயும், மணிலா பயிர் சாகுபடிக்கு 2 ஆயிரம் ரூபாயும், தென்னை சாகுபடி செய்வதற்கு 3,000 ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
அரசு பள்ளிகளில் நீட் பயிற்சி தேர்வு மையங்கள் அமைக்கப்படும். நுண்ணிய பாசனத்திற்காக எக்டேருக்கு 1.70 லட்சம் மானியம் வழங்கப்படும். வெள்ளாடு வளர்ப்புக்கான குறைந்த கால பயிற்சிகள் அளிக்கப்படும். 6 ஆயிரம் ரூபாய் கறவை மாடுகள் வாங்க நிதி உதவி வழங்கப்படும். கால்நடை மருத்துவர்களுக்கு நடமாடும் இருசக்கர மருத்துவ வசதி கொண்ட வாகனங்கள் வழங்கப்படும். செப்டம்பர் 1 முதல் மருத்துவ காப்பீட்டு திட்டம் அமலுக்கு வருகிறது. மதுபான விலையை அறிந்து கொள்ள புதிய செயலி அறிமுகப்படுத்தப்படும்.
இதுபோன்ற பல திட்டங்களுடன் பட்ஜெட் அறிமுகப்படுத்தப்பட்டது. அதேசமயம் முதல்வர் பட்ஜெட் தாக்கல் செய்த போது சபைக்குள் வந்த என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க, பா.ஜ.க ஆகிய ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்று பட்ஜெட் என அச்சிட்ட வெற்றுத்தாள்களை கொண்ட அறிக்கை நூலை வெளியிட்டனர்.

மேலும் எழுந்து நின்று சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வந்துள்ளதால் சபையை சபாநாயகர் நடத்த கூடாது என்றனர். அதற்கு சபாநாயகர் சிவக்கொழுந்து சட்டமன்ற விதிகளை பாருங்கள் என்றார். எதிர்கட்சியினர் ஒட்டுமொத்தமாக எழ மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டது அதனையடுத்து எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் சபாநாயகர் இருக்கை முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து சபை காவலர்கள் மூலம் எதிர்க்கட்சி உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இதனையடுத்து சபை காவலர்கள் மூலம் எதிர்கட்சி உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.