![Promotion blocked by TNPS](http://image.nakkheeran.in/cdn/farfuture/9orZjIE8xsf1iAxYq6wZv6D3edp7ddSZMUAmJYZLquU/1615271534/sites/default/files/inline-images/police-1_6.jpg)
தமிழகத்தில் எத்தனை துறைகள் இருந்தாலும், அவற்றில் மிகவும் முக்கியமானதும், கவனிக்கப்பட வேண்டியதும் என்ற பட்டியலில் காவல்துறையும் சிறைத்துறையும் உள்ளன. அரசுப் பணிகளில் உள்ளவா்களுக்குப் பல்வேறு சங்கங்கள் உண்டு. அதன் மூலம் தங்களுடைய தேவைகளைப் போராட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்கின்றனா். ஆனால் இந்தக் காவல்துறையும், அதனைச் சார்ந்திருக்கும் சிறைத்துறையும் பரிதாபத்திற்கு உரியவைதான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
தமிழகத்தில் மொத்தம் ஆண்களுக்கான 9 மத்திய சிறைகளும், பெண்களுக்கான 3 மத்திய சிறைகளும், 18 முதல் 25 வயது வரையிலானவா்களுக்கு ஒரு சிறை பள்ளியும் உள்ளன. அதில் தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் அதிகமான சிறைக்காவலா்கள் பணியாற்றி வருகின்றனா். தற்போது சிறைத்துறையில் பதவி உயா்வு வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. ஒரு பணியில் குறிப்பிட்ட சில வருடங்கள் பணியாற்றிய பிறகு, தற்போது இருக்கும் நிலையில் இருந்து சற்று அடுத்த நிலைக்கு முன்னேறிப் போக வேண்டும் என்ற எண்ணம் எல்லாருக்கும் இருக்கும்.
அப்படிபட்ட நிலையில் பதவி உயா்வு வழங்காமல் நேரடி பணி நியமனம் செய்வதால் பதவி உயா்வு பெற்று அடுத்த நிலைக்கு முன்னேற வேண்டிய சிறை காவலா்கள், கடைசி வரை ஒரு குறிப்பட்ட நிலையில் பணியாற்றிய பிறகு ஓய்வு பெற்று விடுகின்றனா். அவா்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயா்வு முறையாக கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து நாம் விசாரித்தபோது, “சிறைத்துறையில் பணிக்கு சேரும் காவலா்கள் 2ஆம் நிலை காவலா்களாக பணிக்கு சோ்ந்து, ஒவ்வொரு 10 வருடத்திற்கும் ஒரு பதவி உயா்வு பெற்று அதிகபட்சமாக சிறைத்துறை துணைத் தலைவர் வரை பதிவு உயா்வு பெறுவார்கள்.
![Promotion blocked by TNPS](http://image.nakkheeran.in/cdn/farfuture/mzzScP_LHugRzy4bcVMdV-j28QCbEFb0EvWpR4g7en4/1615271606/sites/default/files/inline-images/police2_22.jpg)
இதில் ஒருவர், 2ஆம் நிலைக் காவலராக பணிக்கு சோ்ந்தால், அடுத்த 10 வருடத்தில் முதல் நிலைக் காவலராக பதவி உயா்வு பெறுவார். அடுத்ததாக 15வது வருடத்தில் உதவி சிறை அலுவலராக பதவி உயா்வு பெறுவார். அதன் பிறகு அந்த இடத்தில் பணியிடம் காலியாக இருந்தால் துணை சிறை அலுவலா் பதவிக்கு வர முடியும். அதன் பிறகு பதவி உயா்வு பெற்று சிறை அலுவலர், சிறை கூடுதல் கண்காணிப்பாளா், கண்காணிப்பாளா், சிறைத்துறை துணைத் தலைவர் வரை பதவி உயா்வு பெற முடியும். ஆனால் தற்போது அரசு நடத்தும் டி.என்.பி.எஸ்.சி தோ்வில் வெற்றிபெறக்கூடியவா்கள் நேரடியாக உதவி சிறை அலுவலா் பணிக்கு வந்துவிடுவதால், ஏற்கனவே பணி மூப்பு அடிப்படையில் பதவி உயா்வுக்காக காத்திருப்பவா்களின் நிலை கேள்விக்குறியாகி விடுகிறது.
இதனால் அவா் கடைசி வரை அதே நிலையில் இருந்து ஓய்வுபெற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார். தோ்வு எழுதி நேரடியாக பணியமர்த்தப்படுபவா்கள் விரைவில் துணை சிறை அலுவலா் பதவிக்கு முன்னேறி விடுகின்றனா். ஆனால் பணி மூப்பு அடிப்படையில் காத்திருப்பவா்கள் அதன்பிறகு உதவி சிறை அலுவலா் பணிக்கு வர முயற்சித்தாலும் வர முடியாமல், அடுத்து புதியதாக தோ்வு செய்யப்படுபவா்கள் அந்த இடத்திற்கு வந்து விடுகிறார்கள். எனவே தங்களுடைய சிறை பணியை 2ஆம் நிலைக் காவலா் பணியில் துவங்கி சிறைத்துறை துணைத் தலைவர் பதவி வரை உயா்வு பெற வேண்டியவா்கள், முதல்நிலை காவலா் பதவியை விட்டுத் தாண்ட முடியவில்லை என்று கூறுகின்றனா்.
தற்போது 2021ஆம் ஆண்டில் தமிழகம் முழுவதும் பரவலாக உள்ள சிறைகளில் கிட்டதட்ட 250க்கும் மேற்பட்ட சிறை காவலா்கள் பல்வேறு தகுதியில் இருந்து அடுத்த நிலைக்கு பதவி உயா்வு பெற காத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு இதுவரை பதவி உயா்வு வழங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே பதவி உயா்வு பெற வேண்டிய தாங்கள், நேரடி பணி நியமனத்தால் பெரிதும் பாதிக்கப்படுகிறோம் என்று கூறுகின்றனா். எனவே இந்தப் பதவி உயா்வு விவகாரத்தில் தமிழக அரசும், சிறைத்துறை தலைவர் சுனில் குமார் சிங் உள்ளிட்டோரும் பணி மூப்பு அடிப்படையில் பதவி உயா்வுக்காக காத்திருக்கும் சிறை காவலா்களுக்கு ஒரு நல்ல முடிவை வழங்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளனா்.