![Professors boycotted the governor's ceremony! Greetings from Su Venkatesan MP](http://image.nakkheeran.in/cdn/farfuture/W5nv5xvBBBP7qX_fENVTytzbGZgWZCAWbV76HzX1ZTM/1698926590/sites/default/files/inline-images/kama-ni.jpg)
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 55வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொள்ளாத நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவி உள்ளிட்டோர் மட்டும் கலந்துகொண்டுள்ளனர். சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கத் தமிழ்நாடு அரசு பரிந்துரைத்தது. இதனையேற்று பல்கலை. செனட் மற்றும் சிண்டிகேட் சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்த நிலையில், அதற்கு ஆளுநர் ஒப்புதல் தர மறுத்துவிட்டார்.
இதனிடையே, ஆளுநரின் இந்த முடிவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அமைச்சர் பொன்முடி மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்துள்ளார். இந்த நிலையில், மதுரை வந்த ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கருப்புக்கொடி ஏந்திப் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து அவர்களைத் தடுத்து நிறுத்தியபோது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி ஏந்திப் போராட்டம் செய்த 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த பரபரப்புக்கு மத்தியில் இன்று காமராஜ் பல்கலைக்கழகத்தின் 55வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பட்டங்களைப் பெற்றனர். அதே நேரத்தில் பல்கலைக்கழக பேராசிரியர்கள் சுரேஷ் மற்றும் ரமேஷ் குமார் ஆகியோர் ஆளுநர் கையில் முனைவர் பட்டத்தை வாங்க மறுத்து இந்த பட்டமளிப்பு விழாவை புறக்கணித்துள்ளனர்.
![Professors boycotted the governor's ceremony! Greetings from Su Venkatesan MP](http://image.nakkheeran.in/cdn/farfuture/vbiOuAOPUY1MAuMcpPXDGKzqswhELVq-Pq5JCtFZfv8/1698926625/sites/default/files/inline-images/su-venkateshan-ni.jpg)
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “விடுதலை போராட்டம், ஜனநாயக மாண்பு, பல்கலைக்கழகத்தின் உரிமை என எதையும் மதிக்காமல் ஜனநாயக விரோதமாக செயல்படும் ஆளுநரின் கையில் முனைவர் பட்டத்தை வாங்க மறுத்து புறக்கணித்த சுரேஷ், ரமேஷ்ராஜ் ஆகியோருக்கு வாழ்த்துகள். பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த 15 க்கும் மேற்பட்ட சிண்டிகேட், செனட் உறுப்பினர்களுக்கும் வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.