
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் சார்பிலும் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. அதிமுக கூட்டணியில் பாஜக உள்ள நிலையில், ஏப்ரல் 2ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி, அதிமுக - பாஜக கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளார். அதேபோல், வரும் 28ஆம் தேதி தமிழகம் வரும் ராகுல் காந்தி, திமுக கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் செய்யவுள்ளார்.
நாளை (27.03.2021) இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி முதன்முறையாக தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வர இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருந்த நிலையில், தற்போது அவரது தமிழக பிரச்சார தேதி மாற்றப்பட்டுள்ளது. கன்னியாகுமரி குளச்சல் திங்கள் நகரில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரியங்கா காந்தி வரும் ஏப்ரல் 3ஆம் தேதி பிரச்சாரம் செய்யவுள்ளார். நாளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கன்னியாகுமரியில் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதால், பிரியங்கா காந்தி தமிழகம் வரவிருக்கும் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.