அரசு பள்ளி ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் தேர்வு முறையை ரத்து செய்து அதற்குபதிலாக தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மேலும் ஒரு தேர்வு நடத்தப்படும் என்று ஜீன் 14 தேதி நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு தற்போது அறிவித்துள்ளனர்.

முன்பு ஆசிரியர்கள் வயதின் அடிப்படையில் எடுக்கப்பட்டனர். பின், அதை மாற்றி திறமைக்கு முன்னுரிமை என்று தகுதி தேர்வின் மூலமாக இடைநிலை ஆசிரியரகள் பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்தனர். அதன்பிறகு அதிலும் மாற்றம் என்று வெயிட்டேஜ் அடிப்படையில் கொண்டுவரப்பட்டது.
இந்த நிலையில் 20 ஆண்டுகளுக்கு முன்பாக படித்த மாணவர்களுக்கு அதிகமான மதிப்பெண் என்பது வழங்கவில்லை, இந்த நிலையிலும் தகுதி தேர்வில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்தாலும் வெயிட்டேஜில் +2 மதிப்பெண் சதவீதம் குறைவதால் இவர்களால் பணிக்கு செல்ல முடிவதில்லை, இந்த முறையை சரிசெய்ய வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையால் மாற்றம் என்ற பெயரில் மேலும் ஒரு தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்தத் தகுதித் தேர்வு என்பது ஆசிரியர்கள் தகுதியானவர்கள் என்பதற்கான ஒரு சான்றிதல்தான் இதன்பிறகு இன்னொரு தேர்வு என்பது அவர்களின் நியமனத்திற்கானது என்கிறது பள்ளிக் கல்வித்துறை. இதன் தொடர்பாக பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் கேட்டபோது,
2012ல் தகுதித்தேர்வை கொண்டுவந்ததிலிருந்து இன்றுவரை, எட்டு ஆண்டுகளாக போராட்டத்தின் விழிம்பிலிருந்தது இந்த பிரச்சனை. வெயிட்டேஜ் என்பதை எடுத்தது எந்தளவிற்கு சந்தோசமான இருக்கிறதோ அதே அளவு மீண்டும் இன்னொரு தேர்வைக் கொண்டுவருவது என்பது வருத்தமாக இருக்கிறது. +2 மதிப்பெண் அடிப்படையில் ஒருவரை மதிப்பீடுவது என்பது தவறானது, அது முறையானதும் இல்லை. அதேபோல ஒருவன் கல்வியியல் படிப்பு முடித்தவுடன் அவன் குழந்தைகளுக்கான உளவியல் படித்துவிட்டு அந்த மாணவர்களுக்கான வளர்க்கும் தகுதியை பெற்றுவிடுகிறான், அதேபோல்தான் பட்டய படிப்பும். இதுவே அவர்களுக்கு தகுதி, அதை மீறி தகுதித்தேர்வு எதற்கு என்பதைதான் நாங்கள் கேள்வியாக எழுப்பினோம். அதைமீறி இன்னொரு தகுதி என்று வெயிட்டேஜ் கொண்டுவந்து அதன்பிறகு, தற்போது மற்றொரு தனித்தேர்வு என்பது தேவையற்றது. இது நியாயமான அணுகுமுறை அல்ல, தமிழகத்தில் சில காலமாக பிற மாநிலத்தை காப்பி அடித்து அந்த முறையைதான் பின்பற்றி வருகிறது.
தமிழகம்தான் கல்விக்கொள்கையில் இந்தியாவிற்கே முன்னோடியாக விளங்கியது. மூன்று கிலோமீட்டருக்கு ஒரு பள்ளியாக இருக்கட்டும், சீருடை, இலவச கல்வி, மதிய உணவு என அனைத்திலும் முன்னோடியாக இருக்கிறது. சென்னை மாநகராட்சியாக இருந்த போதிலும், 1930களில் நீதி கட்சி ஆட்சியின்போது, சிங்காரவேல்தான் சத்துணவு என்ற சொல்லாடலை பயன்படுத்தினார். இப்படி ஒட்டு மொத்தமாக அனைத்திலும் முன்னோடியாக இருந்த தமிழ்நாட்டில், தற்போது பிற மாநிலத்தை பின்பற்றுகிறோம் என்று கூறுவது தவறானது. ஏன் தமிழகத்தில் கல்வியாளர்கள் இல்லையா அல்லது திறமையற்று கிடக்கிறார்களா. இந்த மறுதேர்வு என்பது ஏற்கமுடியாத ஒன்று. தற்போது தகுதித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண் பட்டியலை வைத்து அதில் சீனியாரிட்டி அடிப்படையில் அரசு வேலை வழங்கவேண்டும் என்று கூறினார்.