குட்கா முறைகேடு தொடர்பாக சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜின் குற்றச்சாட்டுக்கு விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.
நேர்மையாக பணியற்றிய எனக்கு ஜார்ஜ் கொடுத்த பரிசு என அந்த குற்றச்சாட்டை கருதுகிறேன். குட்கா தொடர்பாக ஜார்ஜ் என் மீது கூறிய குற்றச்சாட்டு அனைத்தும் உண்மைக்கு மாறானது என கூறியுள்ளார்.
மேலும் அவர், தற்போது இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் சென்றுள்ளது. இல்லையென்றால் நேர்மையான பல அதிகாரிகளை கைது செய்து வழக்கை முடித்து இருப்பார்கள். இந்த ஊழல் புகாரில் ஜார்ஜ், தான் குற்றம் அற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும். அதை விடுத்து மற்ற அதிகாரிகள் மீது வீண்பழி சுமத்தக்கூடாது.
அவர் பழிவாங்கும் நோக்கத்தில் என் மீது தவறான அவதூறுகளை பரப்பி வருகிறார். என் மீது சுமத்தப்படும் குற்றம் முற்றிலும் தவறானது. இதை எங்கே நிரூபிக்க வேண்டுமோ அங்கு நிரூபிப்பேன். சி.பி.ஐ. விசாரணையின் முடிவில் உண்மை குற்றவாளி யார் என்பது விரைவில் தெரியவரும் என்றார்.