தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்திக்காக ஆலையைத் திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு இன்று (27/04/2021) மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு, ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவில், “ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையைக் கண்காணிக்க ஐந்து நிபுணர்கள் கொண்ட குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குழுவில் யார் யார் இடம்பெற வேண்டும் என்பதை தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி மையம் தேர்வு செய்யலாம். தமிழக அரசிடம் ஆலோசித்து, உள்ளூர் மக்களில் இரண்டு பேரை குழுவில் இடம்பெற செய்யலாம். ஐந்து நிபுணர்கள் கொண்ட குழுவைத் தவிர, மேலும் ஒரு குழுவையும் அமைக்க உத்தரவிடப்பட்டுட்டுள்ளது.
ஆக்சிஜனுக்காக மட்டுமே அனுமதி; வேதாந்தாவின் வேறு எந்த ஆதாயத்துக்காகவும் கிடையாது. ஸ்டெர்லைட்டில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை மத்திய அரசிடம்தான் கொடுக்க வேண்டும். தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்குத் தேவையான ஆக்சிஜனை மத்திய அரசுதான் பிரித்துக் கொடுக்கும். ஆக்சிஜன் விநியோகத்தில் தமிழகத்திற்கு முன்னுரிமை கொடுக்க முடியாது; அளவை மத்திய அரசே முடிவு செய்யும். தேவைப்படும் ஆக்சிஜன் குறித்து சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகித் தீர்வு பெறலாம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்துக் கட்சிகளின் ஒப்புதலுடன் தமிழக அரசு அனுமதி அளித்ததை அடுத்து உச்ச நீதிமன்றம், ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி அளித்துள்ள நிலையில், ''ஸ்டெர்லைட்டில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை தமிழகத்தின் முழு தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்க பிரதமர் மோடி பொறுப்பேற்று முன்வர வேண்டும்'' என திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.