
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா நடத்திய தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே தாக்குதல் சம்பவங்கள் நடந்தது. இதில், எல்லைகளை மீறி இந்தியாவின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வந்த தாக்குதல் முயற்சிகளையும், இந்தியா முறியடித்தது.
போர் சூழல் தணிந்து வரும் நிலையில், இன்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அவரது உரையில், ''பஹல்காம் தாக்குதல் ஒட்டுமொத்த நாட்டின் மனசாட்சியே உலுக்கி இருக்கிறது. குடும்பத்தினர் முன்னேயே சுற்றுலாப் பயணிகள் கொடுமையாக கொல்லப்பட்டனர். துளியும் கருணை இல்லாமல் சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். அனைத்து சமுதாயம், அரசியல் கட்சிகள் ஒரே குரலில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நின்றன. பயங்கரவாதத்திற்கு எதிராக ஒட்டுமொத்த நாடு ஒன்றிணைந்துள்ளது.
மே ஏழாம் தேதி 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை நாம் மேற்கொண்டோம். பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க முப்படைகளுக்கும் முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டது. இந்தியாவின் பதிலடி முற்றிலும் நியாயமானது. இனி ஒரு பெண்ணின் நெற்றியில் இருந்து குங்குமத்தை அழிக்கும் எண்ணம் வரவே கூடாது. நமது சகோதரிகள் பாதிக்கப்பட்டால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பது தீவிரவாதிகளுக்கு புரிந்துள்ளது. 'ஆப்ரேஷன் சிந்தூர்' நடவடிக்கைகளில் ஈடுபட்ட முப்படைகளுக்கும் நாட்டு மக்கள் சார்பாக சல்யூட். மே 6 , 7 ஆகிய நாட்களில் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய தாக்குதலை உலக நாடுகள் வரவேற்றுள்ளன. ஆப்ரேஷன் சிந்தூர் என்பது வெறும் வார்த்தை அல்ல ஒட்டுமொத்த மக்களின் உணர்வு. இப்படி ஒரு தாக்குதல் நடக்கும் என தீவிரவாதிகள் கனவில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள். இவ்வளவு பெரிய முடிவுகளை இந்தியா எடுக்கும் என அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். நமது பெண்களின் குங்குமத்தை அழித்ததன் விலையை என்னவென்று தீவிரவாதிகள் உணர்ந்துள்ளனர். அடி தாங்க முடியமால் பாகிஸ்தான் நம்மிடம் கெஞ்சியது. இந்தியாவின் பதிலடியை எதிர்கொள்ள முடியாமல் உலக நாடுகள் மத்தியில் பாகிஸ்தான் கதறி அழுதது. இன்று அமைதி வழியை காட்டிய புத்தரின் புத்த பூர்ணிமா இந்த நாளில் இந்தியா அமைதியை நாடுகிறது'' என தொடர்ந்து உரையாற்றி வருகிறார்.