Skip to main content

“தனியாக வசிக்கும் முதியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்க” - டிடிவி தினகரன்

Published on 12/05/2025 | Edited on 12/05/2025

 

Ensure the safety of elderly people living alone says TTV Dhinakaran

தனியாக வசிக்கும் முதியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “திருப்பூர், ஈரோட்டை தொடர்ந்து சேலத்திலும் வயதான தம்பதியினர் படுகொலை –  கொலைக் குற்றவாளிகளை கண்டறிவதில் அலட்சியமாக செயல்படும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.

சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் வீட்டில் தனியாக வசித்துவந்த வயதான தம்பதியினர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.

திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் அண்மைக்காலமாகவே தனியாக வசித்து வரும் முதியவர்களை நோட்டமிட்டு கொலை செய்து கொள்ளையில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாத திமுக அரசால் தற்போது மேலும் ஒரு இரட்டைக் கொலை அரங்கேறியுள்ளது.  

ஒவ்வொரு கொலைச் சம்பவத்தின் போதும் பல்வேறு தனிப்படைகளை அமைத்தும்,  தீவிர தேடுதல் வேட்டை நடத்தியும் இதுவரை கொலைக் குற்றவாளிகளை நெருங்க முடியாமல் திணறி வரும் காவல்துறையின் மீதான மக்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது.
 
எனவே, சேலத்தில் வயதான தம்பதியினர் கொலை வழக்கை விரிவாக விசாரித்து கொலைக் குற்றவாளிகளை கண்டறிந்து கடுமையான தண்டனை விதிப்பதோடு, தனியாக வசிக்கும் முதியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்