தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய நகரமும் பரபரப்பான வியாபார ஸ்பாட்டுமான ஏரல் மாவட்டத்தின் குறிப்பிடும்படியான பகுதி என்றாலும், வெள்ளம் சங்கமிக்கும் கடைசி பாயிண்ட். வெள்ளத்தின் அசுரப் பாய்ச்சலால் ஆறு தினங்களுக்கும் மேலாக நகரின் நான்கு பக்கங்களும் துண்டிக்கப்பட்டு வெளித்தொடர்பு அற்றநிலை. மின்சாரம், சாலைப் போக்குவரத்து தொலைத் தொடர்பு போன்ற அத்தியாவசிய சாதனங்கள் அனைத்தும் பாதிப்படைய, அந்த நகரம் அங்குள்ள மக்களின் நிலை என்ன என்று அறிய முடியாத நிலை ஏற்பட்டது. சாதாரணமாக ஏரல் உள்ளே நுழைய முடியாமல், அந்நகரின் 6 கி.மீ. தொலைவுக்கு முன்பே வெள்ளம் முற்றுகையிட்டுக் கொண்டிருக்கிறது.
எப்படியும் உள்ளே நுழைய வேண்டும் என்ற பகீரத முயற்சியில் திணறிய நம்மால் மூன்று நாட்கள் முயன்றும் முடியவில்லை. பின் ஒரு வழியாக கிடைத்த டிராக்டர் மூலமாக கடும் சிரமத்தில் ஏரல் நகருக்குள் நுழைய முடிந்தது. நகருக்குள் நுழையும் முன்பாக ஏரலின் சுற்று வட்டாரப் பகுதிகளின் நிலை நம்மை அதிர வைத்தது வீடுகளைச் சுற்றி வெள்ளம் தொடர்பற்ற தனித் தீவாகவே காட்சியளித்தது. மங்கலக்குறிச்சி, குறிஞ்சினூர், சூழவாய்க்கால், ஏரல், மங்கலக்குறிச்சி காலனி உள்ளிட்ட கிராமங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பற்றிருந்தன. சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன. வீடுகள் முங்குமளவுக்கு புரண்டு வந்த வெள்ளம் அந்தப் பகுதி கிராம மக்களின் ஒட்டு மொத்த வாழ்வாதாரத்தையும் சூறையாடிக் கொண்டு போயிருந்தது. ஒரே நாளில் உடுத்திய ஆடையுடன் பராரியாய் நிற்கிற கொடுமை.
ஏரலின் மங்கலக்குறிச்சிப் பகுதியின் வயதான சரஸ்வதி, “அன்னைக்கி சாயங்காலம் வெள்ளம் திபு திபுன்னு வந்துறுச்சி. மெல்ல மெல்ல ஏறுன வெள்ளம் வீட்ட முக்கால்வாசி முங்க வைச்சிறுச்சிய்யா. தப்பிக்க வழியில்ல திக்கு திக்கின்னு ஆயிறுச்சி. வேற வழியில்லாம பக்கத்துவீட்டு மொட்ட மாடிக்கு மக்களோட ஏறுனதால உயிர் தப்பிச்சோம்யா. வெள்ளம் ராத்திரி மட்டும் வந்துதுன்னு வையுங்க இங்க உள்ள ஒரு உசுரு கூட தப்பாதுய்யா..” என்றார் மிரண்டுபோய்.
ஏரலின் குறிஞ்சினூர் பகுதியின் முகம்மது ஜிந்தா, “இந்தப் பகுதியில் உள்ள 150 வீடுகள்லயும் வெள்ளம் முங்க வைச்சிறுச்சிய்யா. மொட்ட மாடிக்குப் போனதால தப்பிச்சோம். அன்ன ஆகாரம் தண்ணியில்லாம குளிர்ல நாலு நாட்களுக்கும் மேலா தவிசசோம். அதனால காய்ச்சல் வந்துறுச்சி. இன்னைக்கித் தாம்ங்க நிவாரண உதவி கெடைச்சது. மத்தக் குடும்பங்களோட நெலம தெரியலிங்க” என்றார் கண்கள் கலங்கியபடி.
“எங்க ஏரியாவுல கழுத்தளவு தண்ணி வந்துறுச்சி. வீடுமேல போயி தப்பிச்சோம். சாப்பாடுயில்லொ, குளிர் நடுக்கம் தூக்கமில்ல. இயற்கை உபாதை அவஸ்தை வேற. எங்க நெலம எப்புடியிருக்கும் எண்ணிப் பாருங்கய்யா. வெளிய எறங்க முடியல, நிலமய சொல்லவும் வழியில்ல. பக்கத்து வீடு நொறுங்கி தரை மட்டமாயிறுச்சி. நல்ல வேளையா அவுக வெளியூர் போயிருந்ததால பொழைச்சாக. என்னோட 55 வயசுல இப்படி ஒரு பேய் வெள்ளத்தப் பாத்ததில்லைங்க” என்ற சூழவாய்க்காலின் சுலைமாள்.
ஏரல் நகரின் கணேஷ் ரைஸ் மில்லின் ஓனரான சுந்தர கரிகாலனின் தொழில் நிறுவனமே அடித்துச் செல்லப்பட்டு விட்டது. “பயங்கர ஸ்பீடுல வந்த வெள்ளம் என்னோட அரிசி ஆலை, அரிசி மூட்டைகள் நவீன அரிசி அறவை இயந்திரம் அத்தனையும் முங்க வைச்சி சீரழிச்சிறுச்சி. டன் கணக்கிலான அரிசி மூட்டைகள் அத்தனையும் பாழாப் போச்சி. மொத்தமா 10 கோடி அளவு சேதம். என்ன செய்யுறதுன்னு புத்தி கலங்கி நிக்கேன். ஒரே நாள் இரவுல என்னய உடுத்தின வேட்டி சட்டையோட நிக்க வைச்சிறுச்சிய்யா வெள்ளம்” என்றார் பதைபதைப்பாய்.
ஏரல் மங்கலக்குறிச்சிக் காலனியின் சாந்தி, வள்ளியம்மாள், விக்னேஷ், அரசம்மாள் மற்றும் ராம மூர்த்தியின் நிலையோ பரிதாபம். “வீடுகள வெள்ளம் முக்குனதால பக்கத்து வீடுகள் பூந்து தப்பிச்சோம்யா. வேற புகழிடம்யில்ல. நாலு நாளா ஒன்னும் கிடைக்காம நாங்க பட்டபாட்ட அந்தப் பகவான் தான் கேக்கனும்யா.் குளிர்ல சுருண்டுட்டோம். வந்த திடீர் வெள்ளம் வீடுகளத் தரை மட்டமாக்கினதோடு பொழைப்புக்கு விவசாயம் பண்ண வாழைகளும் அழிஞ்சி போயிறுச்சி. எல்லாத்தையும் சோலிய முடிச்ச வெள்ளம், எங்களோட வாழ்வாதாரமான நாங்க மேய்ச்சுப் பொழைக்கிற அத்தனை ஆடு, பசு மாடுகளையும் அடிச்சுக் கொண்டு போயி புலம்ப வச்சிறுச்சேய்யா..” என்றனர், கன்னத்தில் வழிந்த நீரைத் துடைத்தபடி.
உணவு உடை இருப்பிடம், ஒட்டு மொத்தமாய் இழந்து பரிதவிப்பிலிருக்கின்றன ஏரலின் சுற்றுப் பகுதிகள். அந்தப் பகுதிகள் அப்படி என்றால் ஏரல் நகரின் நிலையோ ‘பேயடிக்கப் பிள்ளை பிழைக்குமா’ என்ற கதியில் ஏறத்தாழ உருக்குலைந்தே போய்விட்டது என்கிறார்கள் வாழ்வாதாரத்தைப் பறிகொடுத்த மக்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தின் முதன்மையான ஜவுளி, பல சரக்குகள், ஷாப்பிங் மால்கள், தங்க நகைகள் என பல்வேறு வகையிலான பொருட்களின் விற்பனைச் சந்தை ஏரல். தூத்துக்குடியை மிஞ்சியது மட்டுமல்லாமல், தென்பக்கம் ஏரியாவில் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கான வாழ்வாதாரமான அத்தியாவதியப் பொருட்கள் அத்தனையும் விலைகளில் நார்மலாய் கிடைப்பதால், மாவட்டம் மட்டுமல்லாது பிற மாவட்டங்களின் மக்கள் கூட தங்களின் மார்க்கெட்டாக ஏரல் நகரை வைத்திருப்பதால, சாதாரணமா ஒரு சிறிய அளவிலான கடைகளில் கூட வியாபாரம் பணப் புழக்கம் என்று கோடிவரை புரளும் என்றாலும், அங்குள்ள பெரிய நிறுவனங்களின் விற்றுவரவு எக்கச்சக்கமாகும்.
ரொக்கங்களும் பலகோடிகள் இருப்பில் வைக்கிற அளவிலிருக்கும் அந்த மாதிரியான பரபர விற்பனை சந்தை, அப்படிப்பட்ட ஏரலின் நிலையை இப்போது தலைகீழாக மாற்றியுள்ளது வெள்ளம். மூணு மாவட்டத்தின் தாமிரபரணி வெள்ளம் மொத்தமாய் சேர்ந்து கடலில் கலக்குறதுக்காக வருகிற கடைசி மையப் பாய்ண்ட்டான முகத்துவாரமே இந்த ஏரல்தான். லட்சம் கன அடி தண்ணி டேம்கள்ல தொறந்து விடுறது, வழியோரத்தில சேர்ற வெள்ளத்தையும் இழுத்துக் கொண்டு ஏரல் மையப்பகுதி வர்றப்ப அது மூனு லட்சம் கன அடி வெள்ளமாயிறும். அதனால தான் ஏரல் பகுதியின் ஆற்றுப்போக்கு வழி ரொம்ப அகலமாயிருக்கும். பிற்பாடு வெள்ளம் குறுகிய வழியில் புன்னக்காயல் கடல் நோக்கி சங்கமிக்கிற வகையில் பாயும்.
ஆனா இப்ப வந்த மூணு மாவட்டத்தின் வெள்ளம் மொத்தமாய் ராட்சச வேகத்தில் பாய்ஞ்சு வந்தது. நாங்க கனவுல கூட நெனைச்சுப் பாக்காதது. கரையப் பேத்துக்கிட்டு ஏரல் நகரை முங்க வைச்சதோட சுத்துப்பக்கமுள்ள கிராமங்களையும் மூழ்கடிச்சிறுச்சி. எதிர்பார்க்காத இந்த வெள்ளத்தால ஏரல தீவாந்திரமாக்குனதுமில்லாம மத்த பகுதிகளையும் சுத்தி வளைச்சி, துண்டிச்சி பல நாளா தொடர்பே இல்லாத அளவுக்கு கொண்டு போயிறுச்சி.
ஊரே முங்கிப் போனதால நிறுத்தப்பட்ட வாகனங்க சேதமானது, வீடுகளும் இடிஞ்சி போயி தரைமட்டமாகி குப்பை மேடாயிறுச்சி. எத்தன வீடுன்னு கணக்கேயில்ல. அத்தனை பேரும் புது வீடு கட்டுறதத் தவிர வேற வழியுமில்ல. மெயின் பஜார்ல உள்ள அத்தனை கடை பொருட்களும் வெள்ளத்துக்குத் தப்பல. ஊரெல்லாம் வெள்ளம், தூக்கி வீசுன பொருட்கள் இறைந்து கிடந்தன. கடுமையான சேதம். இங்க உள்ள ரெண்டு பெரிய ஜவுளி நிறுவனங்களுக்குள்ளயும் பூந்த வெள்ளம் அங்க உள்ள மொத்த ஜவுளிகளையும் சேதமாக்கி பல கோடி அளவுக்கு நட்டத்த உண்டாக்கிறுச்சி. ஊர்ல முகப்புல உள்ள திரையரங்கம் நாசமாப் போயிறுச்சி. நகை, ரொக்கம், கட்டடம்னு மதிப்புள்ள ஏரல் நகர்ல மட்டும் இருநூறு கோடி அளவுக்கு சேதத்தை உண்டு பண்ணிருச்சி. நாலுநாளா, ஊர் ஜனங்க சாப்பாடு தண்ணியில்லாமத் தவிச்சாங்க. தகவல் தொடர்பு மின்சாரம் பாதிப்பானதால ஏரல் நகரம் என்னாச்சுன்னே வெளி உலகுக்குத் தெரியாமலே போயிறுச்சி.
எப்புடியோ தகவல் தெரிஞ்சி எம்.பி.. கனிமொழியம்மா ஊருக்குள்ள வந்து சேதத்தப் பாத்து பதறிட்டாக. உடனே நிவாரணப் பொருட்கள வரவழைச்சி மக்களுக்கு உணவு உட்பட்டதைக் கொடுத்தாங்க. அவங்க எல்லா ஏரியாவுலயும் சிறப்பா பண்ணாக. அவுக மூல்யமாக அமைச்சர் எ.வ.வேலு, மூர்த்தியும் இங்க உடனே வந்தவுக, பாலம் உடைஞ்சி போனத செப்பனிடுற வேலைய எ.வ.வேலு துரிதப்படுத்தி அத முடிக்க வேண்டி அங்கயே குத்தவைச்சிட்டாக. அத மாதிரி அமைச்சர் மூர்த்தியும் மத்த வேலைகளக் கவனிக்க நகரின் கீழ்பகுதியிலிருந்து வேகப் படுத்திட்டிருக்காக.
வியாபார ஸ்தலமானதால், நகரில் ஊசிமணி பாசிகளை விற்றுப் பிழைக்கிற நரிக்குறவர்களின் குடும்பங்க ஏரல் ஆற்றுப் பக்கமுள்ள அருணாசலசாமி கோவிலருகில்தான் இரவில் தங்குவதுண்டு. வெள்ளம் வந்த மறுநாள் அவர்களைக் காணவேயில்லை. வெள்ளம் அவர்களை அடித்துக் கொண்டு சென்றுவிட்டதா என அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அதுபோக ஏரலிலிருந்து கடைசி பாயிண்ட்டான புன்னக்காயலை நோக்கி வெள்ளம் பாய்ஞ்சு சென்றதில் வழியோரமான கற்குடி, அகரம், கோவங்காடு, மாரமங்கலம், புல்லாவெளி உள்ளிட்ட கிராமங்கள் என்னவானது. சேதங்கள் எப்படி எனத் தெரியாமல் அதிகாரிகளாலும் அங்கு செல்ல முடியாத நிலையில் ஆறு நாட்களாகத் திணறிக் கொண்டிருக்கின்றனர் என்கிறார்கள் ஏரல்வாசிகள்.
அலங்கார முடிகளைத் தயார் செய்து விற்றுப்பிழைக்கும் ஏரல் நகரின் காட்டு நாயக்க சமூக மக்களின் அடிப்படை கட்டமைப்பே வெள்ளத்தால் தகர்ந்து போயிருக்கிறது. அந்தச் சமூகத்தின் வீரம்மாள் கணவனை இழந்த கைம்பெண்... “எங்க வாழ்நாள்ல ஆறு தலை முறையா இப்படிப்பட்டதொரு வெள்ளத்தைப் பாத்ததில்லைங்க. என்னோட வீடு உட்பட எங்க சமூக மக்களின் 20 வீடு வெள்ளத்தில தரைமட்டமாயிறுச்சி. ஒண்ட வழியில்லாம ரெண்டு நாளா நாங்க தண்ணியிலயே நின்னோம்யா. உடம்பே குளிராயிறுச்சி. இப்ப நெனைச்சாலே நெஞ்சு பதறுதுய்யா, எல்லாம் போச்சு. அடுத்து என்ன பண்ண, வழி தெரியலைய்யா..” என்றார் வாடிய குரலில்.
ஏரலின் கணேஷ், “ஊரே அழிஞ்சி போச்சி. இதுல பாதிக்கப்பட்டது ஒட்டு மொத்த அடித்தட்டு மக்கள் தான். நாங்க எப்புடி மீளப் போறோம்னு தெரியல. மூணு நாள் கழிச்சி ஹெலிஹாப்டர்ல உணவு போட்டாக. அந்த உணவு சம்பந்தமான குறைய அதிகாரிகிட்ட சொன்னா மேல தெரியாதுன்ட்டு, நிவாரணப் பணிக்கு வந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்ட்ட சொல்லப் போனா அதிகாரிக வுடல. இது தான்யிங்க எங்க நெலமய்யா..” என்றார்.
ஏரலின் செந்தில்வேல், “30 வருசத்துக்கு முன்னால பக்கத்து ஊர்ல இப்புடித்தான் வெள்ளம் வந்திச்சி. இப்ப இங்க பெரிய வெள்ளம். என்னோட பலசரக்கு கடையில சரக்குக வெள்ளத்தால் நாசமாயிருச்சி. சீனி, கருப்பட்டி மூட்டைக தண்ணியில கரைஞ்சி போயிறுச்சி. பொங்கல் பண்டிகைக்காக பலசரக்கு பொருட்கள லட்சக் கணக்குல கடன்பட்டு எல்லா கடைக்காரங்களும் கொள்முதல் பண்ணுனது வெள்ளத்தில நாசமாப் போயி கடனாளியா நிக்கோம்யா..” என்றார் வேதனையில்.
ஏரலின் சுப்புராயலு, “எங்களோட பர்னிச்சர், எலக்ட்ரானிக் மற்றும் அப்ளையன்ஸ் கடைனு மொத்தம் மூனு கடையோட சரக்கு குடோன்ல இருக்கு. 80 லட்சம் மொத்த ஸ்டாக் இருந்துச்சு. வெள்ளம் உள்ள ஏறுனதுல முக்கால்வாசி சரக்கு நாசமாயிறுச்சிய்யா. இதுல தாழ்வான பகுதி கடைக மொத்தமும் முங்கிப்போச்சு. வீடுகள்லயும் பெரிய இழப்புங்க. யாரும் சேதத்திலருந்து தப்பலய்யா. ஊரே என்ன பண்ணன்னு கண்ணீர் வடிக்கிய்யா..” என்றார் கம்மிய குரலில்.
ஏரலின் காட்டுநாயக்க சமுதாய தலைவர் சித்திரன், “எங்க சமூக மக்க வீடுக நொறுங்கிப் போச்சுய்யா. சாதி சான்றிதழ் கூட சிலருக்கு இருக்கு, பல பேருக்கு இல்ல. அதிகாரிக கிட்ட படிப்புக்காக கேட்டா தர மட்டேங்காக. எங்க பொழைப்புக்கான ஆதாரமெல்லாம் வெள்ளத்தோட போச்சுங்க. இனியொரு தடவ இந்த மாதிரி வெள்ளம் வராம தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கணும்யா அனுபவிச்சதெல்லாம் போதும்யா. இனி இழக்க என்னயிருக்கு. எல்லாம் போச்சு...” என்றார் கரகரப்பான குரலில் .
மின்சாரம் மற்றும் தொலைதொடர்பு துண்டிக்கப்பட்டதால் நகர மக்களின் அலைபேசிகள் இயங்கவில்லை. நகரின் மாரியப்பன், மக்களின் துயரங்கள் எப்படியாவது வெளி உலகிற்குத் தெரிய வேண்டும். மக்களைக் காப்பாற்ற அதிகாரிகள் வருவார்கள் என்ற நம்பிக்கையில் தன்னுடைய ஜெனரேட்டர் மூலம் நகர மக்களின் செல்போன்களுக்கு இலவசமாக சார்ஜ் போட்டுக்கொடுத்தது துன்பப்படுகிற மக்களுக்குச் சற்று ஆறுதலாக இருந்தது. ஏரல் நகர் மீண்டெழுமா? மில்லியன் டாலர் கேள்விதான்.