![Poompuhar](http://image.nakkheeran.in/cdn/farfuture/0UtOkphzVSbipaVBkA1J2PuP9_Q1iKVi5zgxW3JjFDg/1593862633/sites/default/files/inline-images/409_3.jpg)
கரோனா ஊரடங்கால், தான் பெற்றெடுத்த மூன்று பிள்ளைகளையும், பேரக் குழந்தைகளையும் பார்க்க முடியாத ஏக்கத்தில் வயதான தம்பதிகள் இருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட அவலம் நாகை மாவட்டத்தில் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 100 நாட்களை தாண்டிவிட்டது, சில தளர்வுகளோடு ஊரடங்கு நீடித்து வரும் நிலையில் உயிர் பலிகளின் எண்ணிக்கையும், நோய் தொற்றும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நோயால் இறப்பவர்களைவிட பசியாலும், உறவுகளை பிரிந்து மன உளைச்சலுக்கு ஆளாகி இறப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் கணக்கில் வராமலேயே அதிகரித்து கொண்டே இருக்கிறது.
மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட முக்கிய காரணங்களுக்காக மட்டுமே இ-பாஸ் பெற்று மாவட்டங்களுக்கு இடையே செல்ல முடியும் என்கிற நிலை இருந்து வருகிறது. போக்குவரத்து தடையால் வெளியூர்களில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு வருவதற்கும், உள்ளூரில் இருப்பவர்கள் வெளியூரில் இருக்கும் உறவினர்களை சந்திப்பதற்கும் முடியாத நிலையே இருந்து வருகிறது. இதனால் பலர் மனஅழுத்தத்திற்கு ஆளாகியும், ஆளாகும் நிலையிலும் இருக்கின்றனர்.
இந்த நிலையில் நாகை மாவட்டம், பூம்புகார் அருகே உள்ள பெருந்தோட்டம் கிராமத்தை சேர்ந்த வயதான தம்பதிகளான அருள்சாமியும், பாக்கியவதியும் தங்களுடைய மூன்று பிள்ளைகளையும் கரோனா முடக்கத்தால் பார்க்க முடியாமலும், சரிவர பேச முடியாமலும் பெருத்த மனவேதனையோடு தினந்தினம் நாட்களை நரக வேதனையோடு நகர்த்தியவர்கள், நேற்று இரவு விஷம் குடித்துவிட்டு இருவரும் இறந்துவிட்டனர். இதைக்கண்டு ஒட்டுமொத்த கிராமமும் சோகத்தில் முழ்கியது.
இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள். மூவருக்கும் திருமணமாகி சென்னையிலும், வெளியூரிலும் வசித்து வருகின்றனர். அருள்சாமி தனது மனைவியுடன் சொந்த கிராமத்திலேயே தனியாக வசித்து வந்தார். கரோனா ஊரடங்கால் மூன்று மாதங்களுக்கு மேலாக பிள்ளைகளையும், பேரக்குழந்தைகளையும் நேரில் பார்க்க முடியாத சோகத்தில் தவித்திருக்கின்றனர். இனி பிள்ளைகளை பார்க்கவே முடியாது என நினைத்து விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். இதனை அறிந்த திருவெண்காடு போலீசார் அவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிள்ளைகளை பார்க்க முடியாத ஏக்கத்தில் தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒட்டுமொத்த மாவட்ட மக்களுக்கும் அதிச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.