திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சிக்கு உட்பட்ட கோவிந்தாபுரம் பகுதியில் ஒரு உயர் மின் கோபுர மின்விளக்கு உள்ளது. இந்த மின் விளக்கு கடந்த ஒரு மாத காலமாக எரியாததால் அந்த சாலை முழுவதும் இருண்டுப்போய் இருந்துள்ளது. இதுப்பற்றி நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் பொங்கலின்போதும் அந்த பகுதி இருண்டுப்போய் இருந்தது. பொங்கல் பண்டிகையின் போதெல்லாம் அப்பகுதி இளைஞர்கள் மூலமாக சிறுவர்கள் நிகழ்ச்சியாக பல போட்டிகள் இரவு நேரங்களில் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு மின்வெளிச்சம் இல்லாததால் போட்டிகள் எதுவும் நடக்கவில்லை.
இதில் கோபமான அப்பகுதி மக்களும், இளைஞர்களும், உயர் மின் கோபுரம் கம்பத்தில் தீப்பந்தத்தை ஏற்றிவைத்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த விவகாரம் ஆம்பூர் நகரப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக செய்தியாளர்கள் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியதும், உடனடியாக உயர்மின் விளக்கை பழுதுப்பார்த்து சரி செய்து மின்விளக்கை ஒளிரச்செய்தனர்.
எத்தனை மனு தந்து கோரிக்கை வைத்தோம், அப்போதுயெல்லாம் அலட்சியமா நடத்தனாங்க. இப்படி அதிரடியாக செய்தாதான் இந்த அதிகாரிகளுக்கு வேலை செய்யனும்கிற எண்ணம்மே வருது என்றார்கள் அப்பகுதி இளைஞர்கள்.